மன்னாரில் காற்றாலை, கணிய மணல் அகழ்வுக்கு எதிராக 17 வது நாளாக தொடரும் போராட்டம்

மன்னாரில் காற்றாலை, கணிய மணல் அகழ்வுக்கு எதிராக 17 வது நாளாக தொடரும் போராட்டம்

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (19) 17 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த போராட்டத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டு ஆதரவு வழங்கி வருகின்றனர்.

மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு இன்று ஆதரவு வழங்கும் வகையில் பனங்கட்டிக்கொட்டு, ஜிம் பிரவுன் நகர், எமில் நகர், இத்திக்கண்டல், தலைமன்னார் கிராமம் ஆகிய கிராம மக்களும், மீனவர்களும் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியுள்ளனர்.

குறித்த போராட்டமானது மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம் பெற்று வருகிறது.போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி ஒரு மாத கால அவகாசம் கோரியுள்ள நிலையில் மக்களுக்கு நிரந்தரமான ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன் வைத்துள்ளதோடு, ஜனாதிபதி உரிய தீர்வை வழங்காது விட்டால் போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எச்சரித்துள்ளனர்.

Share This