
பிரதமர் மோடி தமிழகத்துக்கு விஜயம்
பிரதமர் நரேந்திர மோடி ஜனவரியில் தமிழகத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் தமிழக சட்ட சபை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடியில் விஜயம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
கூட்டணியை பலப்படுத்தி தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற பாரதிய ஜனதா கட்சி சார்பில் வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மூன்று நாள் பயணமாக மோடி தமிழகம் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 13ஆம் திகதி தமிழகம் வரும் பிரதமர் 15ஆம் திகதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக விவசாயிகளுடன் பொங்கல் விழா கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் விவசாயிகளுடன் இணைந்து முதல்முறையாக பிரதமர் மோடி கொண்டாடும் பொங்கல் விழாவாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ள காசி தமிழ் சங்கமம் நிறைவு விழா மற்றும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நடத்தும் யாத்திரை நிறைவு விழா ஆகியவற்றிலும் பிரதமர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமரின் தமிழக பயணத்துக்கான ஏற்பாடுகளில் பாரதிய ஜனதா கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
