கனடாவில் பொது தேர்தலை அறிவித்தார் பிரதமர்

கனடாவில் பொது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் 28ஆம் திகதி பொது தேர்தல் இடம்பெறும் என அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.
கனடாவின் பிரதமர் பதவியையும் ஆளும் லிபரல் கட்சியின் தலைமையையும் மார்க் கார்னி ஏற்றுக்கொண்ட பிறகு, நாட்டில் பொதுத் தேர்தலை அறிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகிய பின்னர் பிரதமராக பதவியேற்ற இரண்டு வாரங்களுக்குப் பின்னர் மார்க் கார்னி தேர்தலை அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் இறையாண்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் காரணமாக நாடு ஒரு “பெரிய நெருக்கடியை” சந்தித்து வருவதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
டிரம்பை எதிர்கொள்ளவும், அனைவருக்கும் வேலை செய்யும் ஒரு புதிய கனேடிய பொருளாதாரத்தை உருவாக்கவும் வலுவான மற்றும் நேர்மறையான மக்கள் ஆதரவு தேவை என்றும், மாற்றம் தேவை என்றும் கார்னி சுட்டிக்காட்டினார்.
இதற்கிடையில், பொதுத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளில் ஆளும் லிபரல் கட்சி முன்னிலை வகிக்கிறது.
கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கும் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கையையும், கனடாவுக்கு எதிரான அதிகரித்த வரிகளையும் வாக்குகளாக மாற்றுவதே லிபரல் கட்சியின் குறிக்கோளாகும்.
ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பின்னர் மார்ச் 14ஆம் திகதி கனடாவின் லிபரல் கட்சியின் தலைவராகவும், நாட்டின் பிரதமராகவும் மார்க் கார்னி தெரிவுசெய்யப்பட்டார்.
59 வயதான கார்னி, தனியார் துறையில் பணியாற்றிய பின்னர் 2003 இல் பொது சேவையில் நுழைந்தார். நாட்டின் பணவியல் கொள்கையை மேற்பார்வையிடும் கனடா வங்கியின் துணை ஆளுநராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.
உலகளாவிய நிதி நெருக்கடியின் போது, 2008 முதல் 2013 வரை கனடா வங்கியின் ஆளுநராக கார்னி பணியாற்றினார். பின்னர் 2013 முதல் 2020 வரை அவர் இங்கிலாந்து வங்கியின் ஆளுநராகவும் செயற்பட்டார்.
இங்கிலாந்து வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பிரிட்டிஷ் அல்லாத நபர் கார்னி ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.