வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் அவசரக் கூட்டம்

வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பிரதமர் அவசரக் கூட்டம்
காணி அமைச்சின் கீழ் உள்ள ஒரு நிறுவனம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவித்தலுக்கு, தமிழ் மக்கள் பிரதிநிதிகள் தலைமையிலான வட மாகாண மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், பிரதமர் திடீரென இந்தப் பிரச்சினையில் தலையிட்டுள்ளார்.

மார்ச் 28, 2025 வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வர்த்தமானி இல. 2430 இல் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய, வடக்கு கடலோரப் பகுதியில் சுமார் 6,000 ஏக்கர் காணியின் உரிமை மூன்று மாதங்களுக்குள் உறுதிப்படுத்தப்படாவிட்டால், அந்த காணி அரசால் கையகப்படுத்தப்படும் என நில உரித்து நிர்ணயத் திணைக்களத்தின் உதவி அதிகாரி சுவிந்த எஸ். சிங்கப்புலி ஊடாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இது, போரினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளை சூறையாடும் திட்டம் எனவும், அவற்றின் உரிமையை நிரூபிப்பது கடினமான விடயம் எனவும் கூறி, வர்த்தமானி அறிவித்தலை உடனடியாக மீளப்பெற வேண்டுமென தமிழ் தேசியக் கட்சிகள் வலியுறுத்தியதை அடுத்து, பிரதமர் வடக்கு மற்றும் கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளார்.

மே 20ஆம் திகதி, பிரதமர் ஹரிணி அமரசூரிய மக்கள் பிரதிநிதிகளுக்கு அனுப்பிய கடிதம், தமிழர்களின் எதிர்ப்புகளுக்கு காரணமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்க மே 23ஆம் திகதி, வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தின் குழு அறை இல. 1 ற்கு வருமாறு கேட்டுக்கொள்கிறது.

விவசாயம், கால்நடை, காணி விவகாரம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே. டி. லால்காந்த இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார் என தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பலர் போரில் இறந்தமையாலும், பலர் காணாமல் ஆக்கப்பட்டமையாலும், ஆயிரக்கணக்கானவர்கள் வெளிநாடுகளில் அகதிகளாக வாழ்வதாலும், பலரது ஆவணங்கள் போரால் அழிந்துபோயுள்ளமையாலும், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தமது பாரம்பரிய காணி  உரிமைகளை உறுதிப்படுத்துவது கடினமான விடயமென தமிழ் மக்கள் பிரதிநிதிகளும் மனித உரிமை நிபுணர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share This