ஜனாதிபதி இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

ஜனாதிபதியாகப் பதவியேற்று ஒரு வருட பூர்த்தியாகவுள்ள நிலையில், ஜனாதிபதி அநுர குமார் திஸ்ஸாநாயக்க இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது அவர் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, இன்று காலை 8.30 மணிக்கு மயிலிட்டியில் மீன்பிடித் துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, காலை 9.30 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தின் கடவுச்சீட்டு பணிமனையை ஆரம்பித்து வைப்பார் எனவும், அங்கிருந்து, யாழ். பொது நூலகத்துக்கும் ஜனாதிபதி செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிற்பகல் 1.30 மணியளவில் மண்டைதீவில் அமையவுள்ள சர்வதேசதுடுப்பாட்ட மைதான நிர்மாணப் பணிகளைத் தொடக்கி வைக்கும் ஜனாதிபதி, முக்கிய சந்திப்புக்களிலும் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தற்போது தமிழர்கள் மத்தியில் பேசும்பொருளாகியுள்ள செம்மணி மனித புதைகுழியையும் ஜனாதிபதி பார்வையிட கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், அது குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில், மண்டைதீவு மனிதப்புதைகுழி தொடர்பில் ஜனாதிபதி கரிசனை செலுத்த வேண்டும் என வேலணை பிரதேச சபை உறுப்பினர் சுவாமிநாதன் பிரகலாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மண்டைதீவில் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வருகிறார். அந்த இடத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்துக்குள் தான் மண்டைதீவு மனிதப் புதைகுழிகள் காணப்படுகிறது.
மண்டைதீவில் இரண்டு மனிதப் புதைகுழிகள் உள்ளன. அவை அகழப்படப்பட்டு நீதியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்த மாதம் 20ஆம் திகதி வேலணை பிரதேச சபை அமர்வில் பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தேன்.
அது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. கடந்த 26ஆம் திகதி மண்டைதீவு மனித புதைகுழியின் 36 ஆம் ஆண்டு நினைவு தினத்தை புதைகுழி உள்ள இடத்தில் நினைவுகூர்ந்து இருந்தோம்.
எனவே நமது தீர்மானத்தின்படி புதைகுழி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. மண்டைதீவுக்கு வரும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, மண்டைதீவு மனிதப்புதைகுழிகள் தொடர்பிலும் கரிசனை செலுத்த வேண்டும்.
ஜனாதிபதி செம்மணி மனித புதைகுழிக்கு விஜயம் செய்வார் என கடற்றொழில் அமைச்சர் சொல்லியிருக்கிறார். ஆகவே மண்டைதீவுக்கு வருகின்ற ஜனாதிபதி மண்டைதீவு மனிதப் புதைகுழியை பார்வையிட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.
மண்டைதீவு மனிதப் புதைகுழி அகழ்வு பணிகளை விரைவில் ஆரம்பிக்கவும் நிதி ஒதுக்கீடுகளை செய்யவும் நீதியான விசாரணைகளை முன்னெடுக்கவும் ஜனாதிபதி ஒத்துழைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாளை செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவுக்குச் செல்லும் ஜனாதிபதி அநுரகுமார, வட்டுவாகல் பாலத்தின் புனரமைப்புப் பணியைத் தொடக்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தென்னை முக்கோண வலயப் பணிகளையும் ஜனாதிபதி அநுர குமார் திஸ்ஸாநாயக்க ஆரம்பித்து வைப்பார் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.