சீனா சென்றார் ஜனாதிபதி – பதில் அமைச்சர்கள் ஐவர் நியமிப்பு
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கான அரச விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில், ஐந்து அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் கீழ் உள்ள மூன்று அமைச்சுகளுக்கும், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சுக்கும் பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அதன்படி, டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன, டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கான பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சரான கலாநிதி பிரசன்ன குமார குணசேன, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.