சோமாவதி அருங்காட்சியகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி

வரலாற்று சிறப்புமிக்க சோமாவதி விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் சர்வதேச தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் அடங்கிய இரண்டு மாடி கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (06) முற்பகல் நடைபெற்றது.
பெயர் பலகையை திறந்து வைத்து, தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் சர்வதேச தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் அடங்கிய புதிய இரண்டு மாடி கட்டிடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி அங்கு வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை மற்றும் தந்ததாதுவுக்கு மலர் வைத்து சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.
ரத்ன சமூஹ நிறுவனத்தின் தலைவர் தேசமான்ய மித்ரபால லங்கேஸ்வர இந்நிகழ்வில் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் இணைந்த முறையான அபிவிருத்தித் திட்டத்தின் விளைவாக வரலாற்று சிறப்புமிக்க சோமாவதி விகாரையை உலக மக்களுக்கும் இலங்கை மக்களுக்கும் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம், இதனூடாக நிறைவேற்றப்படுவதாக இந்த நிகழ்வில் உரையாற்றிய புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி தெரிவித்தார்.
வரலாற்று சிறப்புமிக்க சோமாவதி ரஜமஹா விகாராதிபதி மஹாவிஹார வன்சிக சியாமோபாலி மஹா நிகாயாவின் மல்வத்து தரப்பின் பதிவாளர் அதி வணக்கத்துக்குரிய கலாநிதி பஹமுனே ஸ்ரீ சுமங்கல நாயக தேரர் உட்பட மகாசங்கத்தினர்கள், வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, வீடமைப்பு பிரதி அமைச்சர் டீ.பி. சரத் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், ரத்ன சமூஹ நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி மானெல் தீபானி கமகே மற்றும் விஹாரையின் நிர்வாக சபை உறுப்பினர்கள் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.