ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்கள் – புலம்பெயர் தேசங்களிலிருந்து இயங்கும் பேராசிரியர்கள்
![ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்கள் – புலம்பெயர் தேசங்களிலிருந்து இயங்கும் பேராசிரியர்கள் ஜனாதிபதியின் வெளிநாட்டு பயணங்கள் – புலம்பெயர் தேசங்களிலிருந்து இயங்கும் பேராசிரியர்கள்](https://oruvan.com/wp-content/uploads/2024/12/anura-3.jpg)
(சுப்ரமணியம் நிஷாந்தன்)
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அமெரிக்கா, கனடா, இத்தாலி, ஜப்பான், சீனா, இந்தியா என பல நாடுகளுக்கு பயணங்களை மேற்கொண்டதுடன், அங்குள்ள இலங்கையர்கள் பலரையும் சந்தித்திருந்தார்.
அவர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுக்குச் சென்றிருந்த சந்தர்ப்பங்களில் அங்கு பல்கலைக்கழகங்களில் பணிப்புரியும் இலங்கை பேராசிரியர்கள் மற்றும் தொழில்நுட்ப துறையில் பணிப்புரியும் இலங்கையின் நிபுணர்களை சந்தித்து கலந்துரையாடல்கள் நடத்தியதுடன், எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அமைந்தால் தமக்கு ஆதரவளிக்குமாறும் கோரியுள்ளார்.
ஆட்சிமாற்றத்துக்கு முன்னதாக ஆட்சிமாற்றம் இடம்பெற்றால் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நிகழ்ச்சி நிரல் தொடர்பில் அநுரகுமார திசாநாயக்க பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதுடன், பல்வேறு திட்டங்களையும் வகுத்துள்ளார்.
அதன் பிரகாரமே ஜனாதிபதியின் செயலாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் ஜனாதிபதியின் கீழ் இயங்கும் அமைச்சுகளுக்கான நியமனங்களும் இடம்பெற்று வருகின்றன.
இந்தப் பின்னணியில் ஜனாதிபதியின் இந்திய மற்றும் சீன பயணங்களை ஒழுங்குப் படுத்துவதில் புலம்பெயர் தேசங்களில் வாழும் பல பேராசிரியர்களும் இருந்துள்ளனர்.
எதிர்வரும் 10ஆம் திகதி ஐக்கிய அரபு இராஜ்ஜியத்துக்கு இடம்பெறும் ஜனாதிபதியின் பயணத்தை ஒழுங்கமைப்பதில் இந்தப் பேராசிரியர்கள் முக்கிய பங்கை வகிப்பதாக தெரிவருகிறது.
ஜனாதிபதியின் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் இவர்கள் நன்கு அறிந்துள்ளதாகவும் ஜனாதிபதியின் அடுத்தடுத்த வெளிநாட்டு பயணங்கள் எவ்வாறு இடம்பெற வேண்டுமென்ற திட்டமிடல்களையும் இவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.