முதல்முறையாக வெளிநாடு செல்லும் பாப்பரசர் லியோ

முதல்முறையாக வெளிநாடு செல்லும் பாப்பரசர் லியோ

போப் பதினான்காம் லியோ எதிர்வரும் நவம்பர் மாதம், துருக்கி மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்வதாக வத்திக்கான் நிர்வாகம் அறிவித்துள்ளது.

வத்திக்கான் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான பாப்பரசர் பிரான்சிஸ், கடந்த ஏப்ரல் மாதம் காலமானார்.

அதையடுத்து, புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்காவைச் சேர்ந்த கர்தினால் ரொபர்ட் பெர்வோஸ்ட், மே மாதம் பாப்பரசர் பதினான்காம் லியோவாகப் பதவியேற்றார்

மறைந்த பாப்பரசர் பிரான்சிஸை போலவே, உலக நாடுகளிடையே அமைதியை நிலைநாட்ட போர் நிறுத்தங்களைப் பிரசாரம் செய்து வரும் பதினான்காம் லியோ, தனது முதல் வெளிநாட்டு பயணத்தை துருக்கியில் இருந்து ஆரம்பிக்கவுள்ளார்.

துருக்கியின் இஸ்னிக் நகரத்தில் உள்ள முதல் கிறிஸ்தவ சபையான நைசியா சபையின் 1700ஆவது ஆண்டு நிறைவு நாளை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் இந்தப் பயணத்தை மறைந்த போப் பிரான்சிஸ் திட்டமிட்டிருந்தார். ஆனால், அதற்கு அவர் மரணமடைந்ததால் அவரது பயணத்தை போப் பதினான்காம் லியோ தொடர்வதாகக் கருதப்படுகிறது.

இந்த நிலையில், போப் பதினான்காம் லியோ வரும் நவம்பர் 27 முதல் நவம்பர் 30 ஆம் திகதி வரையில் துருக்கியிலும், வரும் நவம்பர் 30 முதல் டிசம்பர் 2 ஆம் திகதி வரையில் லெபனான் நாட்டுக்கும் பயணம் மேற்கொள்வதாக வத்திக்கான் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த 13 ஆண்டுகளில், பாப்பரசர் ஒருவர் லெபனான் நாட்டுக்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னர், மறைந்த பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட் லெபனான் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share This