திருகோணமலையில் பொலிஸாரை வீட்டுக்குள் அடைத்து வைத்த சம்பவம் – அறுவர் கைது

திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவில் சீருடை அணிந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் மார்ச் 31 ஆம் திகதி நடந்துள்ளது. ஒரு குழுவினர் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பதை காட்டும் காணொளி ஒன்று வெளியாகியிருந்தது.
சம்பவம் தொடர்பாக நிலாவெளி பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு, அதே நாளில் ஒரு சந்தேக நபரைக் கைது செய்து, திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், இன்று (02) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற சந்தேக நபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றிருந்த நிலையில், நிலாவெளி பொலிஸ் நிலையம் விசாரணைகளை மேற்கொண்டு நேற்று (01) ஒரு பெண் சந்தேக நபரையும் ஐந்து சந்தேக நபர்களையும் கைது செய்தது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், 20, 21, 22, 28, 35 மற்றும் 45 வயதுடையவர்கள் என்றும், அவர்கள் நிலாவெளி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்களைக் கைது செய்ய நிலாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திருகோணமலை நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அடம்போடை பகுதியில் தலைக்கவசம் அணியாமல் மற்றும் அதிக சத்தத்தை எழுப்பியவாறு மோட்டார்சைக்கிளில் சென்றோரை கைது செய்ய முற்பட்ட போக்குவரத்து பொலிஸாரை கடமையை செய்ய விடாது இளைஞர் குழு ஒன்று தடுத்திருந்தது.
அத்தோடு பொலிஸாரின் தொலைபேசியையும் சேதமாக்கி அட்டகாசம் செய்திருந்தனர். மேலும், போக்குவரத்து பொலிஸாரை அந்த இளைஞர் குழு அருகிலுள்ள வீடொன்றுக்குள் இழுத்துச்சென்று பூட்டி அடைத்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.