சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் – 13,392 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ சித்தி

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் – 13,392 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ சித்தி

2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகளின்படி, 237,026 மாணவர்கள் உயர் தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் தொடர்பாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று (11) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த ஆண்டு பரீட்சை எழுதிய மாணவர்களில் 73.45 வீதம் பேர் உயர் தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். அனைத்துப் பாடங்களிலும் 9 ஏ சித்திகளையும் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 13,392 எனவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

இது மொத்த தேர்ச்சி சதவீதத்தில் 4.15 வீதம் ஆகும். அனைத்துப் பாடங்களிலும் சித்திபெறாத மாணவர்களில் 2.34 சதவீதம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், மாகாண ரீதியில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களின் அடிப்படையில் தென் மாகாணம் முதலிடம் பிடித்துள்ளதாகவும், அங்கு தேர்ச்சி வீதம் 75.64 ஆக பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண வாரியாக மாணவர்கள் தேர்ச்சி பெற்ற சதவீதம்

மேற்கு – 74.47 வீதம்

மத்திய – 73.91 வீதம்

தெற்கு – 75.64 வீதம்

வடக்கு – 69.86 வீதம்

கிழக்கு – 74.26 வீதம்

வடமேற்கு – 71.47 வீதம்

வட மத்திய – 70.24 வீதம்

ஊவா – 73.14 வீதம்

சபரகமுவ – 73.44 வீதம்

இதே நேரத்தில், கணித பாடத்தில் 69.07 வீத மாணவர்களும், அறிவியல் பாடத்தில் 71.06 வீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர்.

73.82 வீத மாணவர்கள் ஆங்கில பாடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடங்களின் அடிப்படையில் தேர்ச்சி சதவீதம்

பௌத்தம் 83.21 வீதம்

சைவநெறி 82.96 வீதம்

கத்தோலிக்கம் 90.22 வீதம்

கிறிஸ்தவம் 91.49 வீதம்

இஸ்லாமியம் 85.45 வீதம்

ஆங்கிலம் 73.82 வீதம்

சிங்கள மொழி மற்றும் இலக்கியம் 87.73 வீதம்

தமிழ் மொழி மற்றும் இலக்கியம் 87.03 வீதம்

வரலாறு 82.17 வீதம்

அறிவியல் 71.06 வீதம்

கணிதம் 69.07 வீதம்

Share This