இன்னும் 24 மணி நேரம் மட்டுமே!!! நாளை தூக்கு, நிமிஷாவை காப்பாற்ற போராடும் குடும்பம்

கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள இந்திய செவிலியரான நிமிஷாவுக்கு துாக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘ஏமனில், இந்திய செவிலியரான நிமிஷாவுக்கு துாக்கு தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில், எந்த எல்லை வரை முடியுமோ, அதுவரை முயற்சி செய்து பார்த்தும், ஒன்றும் செய்ய முடியவில்லை’ என, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர் 36 வயதான நிமிஷா பிரியா. இவர், மேற்காசிய நாடான ஏமனில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.
பல மருத்துவமனைகளில் செவிலியராக பணிபுரிந்த அவர், பின், அந்நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் தலைநகர் சனாவில் சொந்தமாக, ‘கிளினிக்’ துவக்கினார்.
நிமிஷாவின் வருமானம், கிளினிக்கின் உரிமம், கடவுச்சீட்டு உள்ளிட்டவற்றை பிடுங்கி வைத்துக்கொண்டு, அவருக்கு தலால் தொல்லை தந்ததாக கூறப்படுகிறது. 2017ல், தலாலுக்கு மயக்க மருந்து கொடுத்து, கடவுச்சீட்டை மீட்கும் முயற்சியில் நிமிஷா இறங்கினார்.
அதிக மயக்க மருந்து செலுத்தப்பட்டதால், தலால் உயிரிழந்தார். அவரை நிமிஷா விஷ ஊசி போட்டு கொன்ற கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 2023ல், அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் துாக்கு தண்டனை விதித்தது. இதை எதிர்த்து, நிமிஷா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஏமன் நாட்டு சட்டப்படி, இறந்தவரின் குடும்பத்துடன் பேச்சு நடத்தி, மன்னிப்பு கேட்டு, நஷ்ட ஈடாக அவர்கள் கேட்கும் பணம் வழங்குவதுடன், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மன்னித்தால், குற்றவாளியின் தண்டனை தள்ளுபடி செய்யப்படும் வழக்கம் உள்ளது.
இதை பயன்படுத்தி, நிமிஷாவை காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது எதுவும் ஏற்றுக்கொள்ளப்படாத நிலையில், நிமிஷாவுக்கு நாளை துாக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், அவரின் தண்டனையை நிறுத்தக்கோரி இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிமிஷா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேஹ்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு தரப்பில் முன்னிலையான அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி, “நிமிஷா விவகாரத்தில், பாதிக்கப்பட்டவர் குடும்பத்தினருடன் சமாதான பேச்சு நடத்தப்பட்டது.
எந்த எல்லை வரை செல்ல முடியுமோ, அதுவரை சென்று எல்லா முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டது.
”தண்டனையை நிறுத்தி வைப்பது தொடர்பாக, அங்குள்ள வழக்கறிஞருடன் பேச்சு நடத்தி பார்த்தும் எந்த பலனும் இல்லை. நிமிஷா தரப்பில், இழப்பீடாக 8.5 கோடி ரூபாய் தர தயாராக இருந்தும், தலால் குடும்பத்தினர் அதை ஏற்க மறுத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், இதை கவுரவ பிரச்னையாக பார்ப்பதால், பணம் ஏற்க மறுத்துள்ளனர். ”இருப்பினும், தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. மரண தண்டனை தள்ளி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், அது நடக்குமா என்பது உறுதியாக தெரியவில்லை. இந்த விவகாரத்தில் வரையறுக்கப்பட்ட எல்லையை மீறி எதுவும் செய்ய முடியாத நிலையில் மத்திய அரசு உள்ளது,” என தெரிவித்தார்.
அப்போது, நிமிஷா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஏதாவது முக்கிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என கோரிக்கை வைத்தார்.
அப்போது, ‘இந்த விவகாரத்தில் நாங்கள் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும்? அப்படியே பிறப்பித்தாலும் அதை யார் கேட்கப் போகின்றனர்?
‘மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது’ எனக்கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தனர். அப்போது, ஏமனில் உள்ள நிலை குறித்து விளக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.