
போரின் விளிம்பில்: அமெரிக்கா – ஈரான் மோதலின் முழுப்பின்னணி
உலகமே இன்று ஒரு பெரும் போரின் விளிம்பில் நடுக்கத்துடன் நின்று கொண்டிருக்கிறது. வல்லரசு நாடான அமெரிக்காவிற்கும், மத்திய கிழக்கின் பலமிக்க ஈரானுக்கும் இடையிலான மோதல் இன்று நேற்று தொடங்கியதல்ல. இது ஒரு நீண்ட கால அரசியல் சதுரங்கம். சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஒருபுறம், ஏவுகணைத் தாக்குதல்கள் மறுபுறம் என நகரும் இந்த மோதலின் பின்னணி என்ன? ஏன் இந்தத் தாக்குதல்கள்? விரிவாகப் பார்ப்போம்.
ஒரு காலத்தில் அமெரிக்காவும் ஈரானும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர் என்பது இன்றைய தலைமுறைக்கு வியப்பாக இருக்கலாம். 1950-களில் ஈரானை ஆட்சி செய்த Mohammad Reza Shah Pahlavi, அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளியாக இருந்தார். அந்தச் சமயத்தில் அமெரிக்காதான் ஈரானுக்கு அணுசக்தி தொழில்நுட்பத்தையே வழங்கியது. ஆனால், இந்த இணக்கமான பொற்காலம் நீண்ட காலம் நீடிக்கவில்லை.
இந்த நட்பு 1979-ல் தலைகீழாக மாறியது. ஷா மன்னர் திணித்த மேற்கத்திய கலாசாரம் மற்றும் ‘SAVAK’ எனும் ரகசியப் பொலிஸாரின் அடக்குமுறைக்கு எதிராக வெடித்த ஈரானியப் புரட்சியால், மன்னர் பதவியிறக்கப்பட்டு, அயதுல்லா கொமேனி தலைமையிலான இஸ்லாமிய ஆட்சி அமைந்தது.
புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்காவில் தஞ்சமடைந்த ஷா மன்னரை மீண்டும் ஈரானிடம் ஒப்படைக்க அமெரிக்கா மறுத்தது. இதனால் ஆத்திரமடைந்த ஈரானிய மாணவர்கள் அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட்டு, 52 அதிகாரிகளை 444 நாட்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்தனர். இந்தச் சம்பவம் அமெரிக்காவின் வரலாற்றில் ஒரு ‘ஆறாத வடுவாக’ மாறி, இரு நாடுகளையும் பரம எதிரிகளாக்கியது.
ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதே கடந்த 20 ஆண்டுகால உலக அரசியலின் மையப்புள்ளி. 2025-ஆம் ஆண்டு மே மாதம், ஈரானின் அணு ஆயுதக் கிடங்குகளை முழுமையாக அழித்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்தது. ஆனால், இப்போது மீண்டும் ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாகக் கூறி தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. அழித்துவிட்டதாகச் சொன்ன கிடங்குகள் ஓராண்டுக்குள் மீண்டும் எப்படி வந்தன? அன்று அமெரிக்கா சொன்னது பொய்க்கணக்கா அல்லது ஈரானின் இரகசிய தொழில்நுட்பம் அவ்வளவு வலிமையானதா?
இங்கேதான் அரசியல் சதுரங்கத்தின் ஒரு அதிர்ச்சிகரமான திருப்பம் அரங்கேறியது. 2026 பிப்ரவரி 26-ஆம் திகதி, ஓமான் தலைநகர் மஸ்கட்டில் வைத்து இரு நாடுகளுக்கும் இடையே ரகசிய சமாதானப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தை வெற்றி என அறிவிக்கப்பட்ட 24 மணிநேரத்திற்குள், பிப்ரவரி 28 அதிகாலையில் அமெரிக்கா ஈரானின் முக்கிய தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடுத்தது. சமாதானம் பேசிக்கொண்டே ஈரானை ரகசியமாகச் சுற்றி வளைத்த அமெரிக்காவின் இந்த நடவடிக்கை, ஒரு திட்டமிட்ட ‘தந்திரோபாய ஏமாற்று வேலை‘ என்றே பார்க்கப்படுகிறது.
தனது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் நிலையிலும், அமெரிக்கா ஏன் இஸ்ரேலுக்காக ஈரானுடன் இத்தனை பெரிய மோதலில் ஈடுபட்டுள்ளது? இதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன
பாதுகாப்பு ஒப்பந்தம்: மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஒரே ஜனநாயகக் கூட்டாளி இஸ்ரேல் மட்டுமே. அதன் பாதுகாப்பை உறுதி செய்வது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் பிரிக்க முடியாத அங்கம்.
ஈரானின் அச்சுறுத்தல்: ‘இஸ்ரேல் என்ற நாடு உலக வரைபடத்திலிருந்து துடைத்தெறியப்பட வேண்டும்’ என்பது ஈரானின் நிலைப்பாடு. ஹெஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போன்ற ஈரானிய ஆதரவு அமைப்புகளை முடக்க ஈரானை வீழ்த்துவது அமெரிக்காவின் வியூகம்.
அமெரிக்க உள்நாட்டு அரசியல்: அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் அரசியலில் செல்வாக்கு மிக்க ‘Jewish Lobby’ அமைப்புகளின் அழுத்தம், எந்தவொரு அமெரிக்க ஜனாதிபதியையும் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்க வைக்கிறது.
2018-ல் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகிய பிறகு அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் ஈரானின் முதுகெலும்பை உடைத்துள்ளன. எண்ணெய் ஏற்றுமதி முடங்கியதால் விலைவாசி உயர்ந்து மக்கள் கடும் துயரத்தில் உள்ளனர். பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி, மக்களை அரசாங்கத்திற்கு எதிராகத் திருப்புவதே அமெரிக்காவின் நோக்கம்.
உண்மையில், ஈரானில் உள்ள ஒருசாரார் ஆட்சி மாற்றத்தை விரும்பினாலும், பெரும்பான்மையான மக்கள் அமெரிக்காவின் இந்தத் தலையீடு தங்களது இறையாண்மைக்கு எதிரானது எனக் கருதி வீதிகளில் இறங்கிப் போராடுகின்றனர். அமெரிக்கா எதிர்பார்த்த உள்நாட்டுப் போர் ஏற்படவில்லை, மாறாக மக்கள் தேசப்பற்றுடன் அமெரிக்காவின் வியூகங்களை எதிர்க்கத் தொடங்கியுள்ளனர்.
தாக்குதல்கள் உச்சக்கட்டத்தை எட்டியபோது, ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி தனது பதுங்கு குழிகளுக்குச் செல்லாமல், தனது அலுவலகத்திலிருந்தே தாக்குதல்களை எதிர்கொண்டு அங்கேயே உயிர்நீத்தார். கமேனியின் மறைவுக்குப் பின் ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் என அமெரிக்கா போட்ட கணக்கு பொய்த்துப் போனது. மாறாக, கமேனியின் மரணம் ஈரானிய மக்களிடையே ஒரு புதிய அக்னியை மூட்டியுள்ளது.
இலங்கைக்கு அருகாமையில் ஈரானியப் போர்க்கப்பல் ‘IRIS Dena‘ மீதான அமெரிக்கத் தாக்குதல், இந்தப் போரை இந்தியப் பெருங்கடலுக்கும் கொண்டு வந்துள்ளது. இதனால் ஆசிய நாடுகளுக்கான 60 சதவீத எரிபொருள் விநியோகம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால், கடல்சார் காப்பீட்டுத் தொகைகள் 500 சதவீதம் உயர்ந்துள்ளன.
அமெரிக்காவின் பலமும் ஈரானின் விடாப்பிடித் தனமும் இன்று மத்திய கிழக்கை ஒரு எரிமலையாக மாற்றியுள்ளது. 47 ஆண்டுகாலப் பகை இன்று ஒரு புதிய உலகப் போருக்கு வித்திடுமா அல்லது அமைதியில் முடியுமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
தொகுப்பு : தர்மராஜா ரஸ்மிலா
