இனி அரிசியை இறக்குமதி செய்ய தேவையில்லை

இனி அரிசியை இறக்குமதி செய்ய தேவையில்லை

அரிசியை இனிமேலும் இறக்குமதி செய்ய வேண்டிய தேவை இல்லை எனவும் அதன் காரணமாக அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் நீடிக்கப்படாது எனவும் வர்த்தக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி அனுமதிப்பத்திரமின்றி அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியிருந்தது.

குறித்த அனுமதியுடன் தனியார் இறக்குமதியாளர்கள் மூலம் 150,000 மெட்றிக் தொன்னுக்கும் அதிகமான அரிசித் தொகையை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு மேலும் அரிசியை இறக்குமதி செய்தால் சிக்கலான நிலை உருவாகும் வாய்ப்புகள் உள்ளதாக குறித்த உயர் அதிகாரி சுட்டிக்காட்டினார்.

பல பிரதேசங்களில் நெல் அறுவடை ஏற்கனவே ஆரம்பித்து விட்டதாகவும் எதிர்வரும் நாட்களில் அரிசி பிரச்சினை இருக்காது என எதிர்ப்பார்ப்பதாகவும் கூறப்படுகிறது.

அனுமதிப்பத்திரமின்றி அரிசி இறக்குமதிக்காக அரசாங்கம் வழங்கியிருந்த கால அவகாசம் கடந்த 10ஆம் திகதியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This