
அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரித்தார் நிக்கோலஸ் மதுரோ
அமெரிக்க நீதித்துறையால் தாக்கல் செய்யப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் வெனிசுவெலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ முற்றிலும் மறுத்துள்ளார்.
நியூயோர்க்கில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
வெனிசுவெலா ஜனாதிபதி மற்றும் அவரது மனைவியும் சிறைச்சாலை உடையில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
தான் தற்போது வெனிசுலாவின் ஜனாதிபதி என்றும், தான் ஒரு நிரபராதி என்றும் அவர் நீதிமன்றத்தில் கூறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், முதல் பெண்மணி செலியா புளோரஸும் தனக்கு எதிரான போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
இருப்பினும், வெனிசுலா ஜனாதிபதியோ அல்லது அவரது மனைவியோ பிணை கோரிக்கையை சமர்ப்பிக்கவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்பினரும் தங்கள் வாதங்களை முன்வைத்த பின்னர் நீதிபதி ஆல்வின் ஹெல்லர்-ஸ்டீன், இந்த வழக்கை மார்ச் 17 ஆம் திகதிக்கு மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார்.
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை பிரதிநிதித்துவப்படுத்திய சட்டத்தரணி பாரி ஜோயல் பொல்லாக், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைப் பிரதிநிதித்துவப்படுத்தி நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
நிக்கோலஸ் மதுரோவிற்கு ஆதரவாககும், எதிராகவும் நூற்றுக்கணக்கான மக்கள் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் கூடியிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
