நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு தடை , நாடு முழுவதும் போராட்டம் – 14 பேர் பலி

சமூக வலைத்தள தடைக்கு எதிராக நேபாளத்தில் இடம்பெற்ற போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 80 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
நேபாள நாட்டின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அந்நாட்டில் இயங்கும் அனைத்து சமூக வலைதள நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும் என அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 28 ஆம் திகதி நேபாள அரசு, சமூக வலைதள நிறுவனங்கள் பதிவு செய்வதற்காக 07 நாட்கள் காலவகாசம் வழங்கியது .
அந்த காலவகாசம் நிறைவடைந்த நிலையில் கடந்த 04 ஆம் திகதியன்று பதிவு செய்யாமல் உள்ள 26 சமூக வலைதளங்கள் அங்கு தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த நிறுவனங்கள் பதிவு செய்யும் வரையில் தடை நடவடிக்கை தொடரும் என அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
தற்போது எக்ஸ், பேஸ்புக், யூடியூப் என 26 சமூக வலைதளங்கள் நேபாளத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேபாள அரசின் சமூக வலைதள தடைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.