நயன்தாரா ஆவணப்பட சர்ச்சை… தீர்ப்பு ஒத்தி வைப்பு
நயன்தாராவின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படத்தில் உரிய அனுமதியின்றி நானும் ரவுடிதான் படப் பாடல் காட்சிகள் பயன்படுத்தப்பட்டதால் நயன்தாராவிடம் ரூபாய் 10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் சென்னை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
தனுஷின் நிறுவனம் தொடர்ந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது.
இவ் வழக்கு விசாரணை நேற்று புதன்கிழமை சென்னை மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அதன்படி, நெட்பிளிக்ஸ் நிறுவனம் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், ஆவணப்படம் வெளியாகி ஒரு வாரத்துக்குப் பின்பே தனுஷ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் இவ் வழக்கை ஆரம்பக் கட்டத்திலேயே தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறினார்.
தனுஷ் தரப்பு வழக்கறிஞர், நானும் ரவுடி தான் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் அனைத்தும் வொண்டர்பார் நிறுவனத்துக்கு சொந்தமானது என வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வொண்டர் பார் நிறுவனத்தின் வழக்கை நிராகரிக்கக் கோரி நெட்பிளிக்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார்.