
நவகமுவ துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் உயிரிழப்பு
நவகமுவ, கொரதொட்ட மெணிக்காகார வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பிலான புதுப்பித்த தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இதன்படி, இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக இந்த சம்பவதம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் நேற்று (1) இரவு மூன்று பேரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 20 வயதுடைய ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நவகமுவ பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வாடகை வீட்டில் தங்கியிருந்த மூன்று பேரை குறிவைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் வந்த குழுவினரே துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வீட்டின் குளியலறைக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பொரளை பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
அதுருகிரியவில் உள்ள பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவரின் உடலில் நான்கு துப்பாக்கி தோட்டாக்களும், மற்றொருவரின் உடலில் ஒரு தோட்டாவும் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் நடந்த இடத்தில் ஒன்பது மில்லி மீட்டர் அளவிலான 15 தோட்டா உறைகள் கண்டெடுக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (01) இரவு 9.30 மணி முதல் 10 மணி வரை துப்பாக்கிச் சூடு நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பாதிக்ப்பட்ட மூவரும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு குறித்த வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
எனினும், இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலின் விளைவாக இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக நவகமுவ பொலிஸாரும், நுகேகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.
