இலங்கைக்கான USAID நிதியுதவி குறித்து விசாரணை நடத்த வேண்டும் – நாமல் வலியுறுத்தல்
இலங்கையில் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தின் கீழ் செயற்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
தனது எக்ஸ் தளத்திலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிதியிலிருந்து பயனடைந்த அரசு சாரா நிறுவனங்களின் கணக்கு உட்பட, விரிவான அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்திருப்பதாவது,
மனிதாபிமான உதவி எனும் போர்வையில் ஏனைய நாடுகளில் ஸ்திரமின்மையை உருவாக்க சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்தின்
நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை அண்மைய ஆண்டுகளில் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனத்திலிருந்து
மில்லியன் கணக்கான டொலர்களைப் பெற்றுள்ளது.
இதேவேளை, 100 இற்கும் மேற்பட்ட அரசு சாரா நிறுவனங்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஊடகப் பிரமுகர்கள் இந்த மானியங்களிலிருந்து பயனடைகிறார்கள்.
இருப்பினும், இந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து தெளிவான கணக்கு இல்லை” என்றார்.
மேலும் வெளிநாட்டு நிதியுதவி பெறும் திட்டங்களில் வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தி, அரசு சாரா நிறுவனங்களின் நிதியுதவி குறித்த நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட விதிமுறைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் நாடாளுமன்ற அவர் அழைப்பு விடுத்தார்.