
பங்களாதேஸில் தேர்தலில் வெற்றிபெற்ற 43 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு
பங்களாதேஸில் கடந்தவாரம் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற 43 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டு வழக்குகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாணவர்கள் போராட்டத்தால் கடந்த 2024 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் வியாழக்கிழமை பங்களாதேஸில் புதிய அரசை தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது.
இதில் மொத்தம் உள்ள 297 இடங்களில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பங்களாதேஸ் தேசியவாத கட்சியான பிஎன்பி, 212 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது.
இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்களின் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்ததில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்களில் 43 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், 142 எம்பிக்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுமார் 185 எம்பிக்கள் கடந்த காலங்களில் வழக்கு சந்தித்தவர்கள் எனவும், 95 எம்பிக்கள் மீது கடந்த காலத்திலும் தற்போதும் வழக்குகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.
தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற பிஎன்பி கட்சியின் எம்பிக்களில் 50 சதவீதமானோருக்கு வழக்குகள் உள்ளதாகவும், இரண்டாவது பெரிய கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி எம்பிக்களில் 47 சதவீதமானோர் மீது வழக்குகள் உள்ளதாகவும் தெரியவந்தள்ளது.
