ஜன நாயகனுக்கு மேலும் நெருக்கடி!! படம் வெளியாவதில்  தாமதம்

ஜன நாயகனுக்கு மேலும் நெருக்கடி!! படம் வெளியாவதில்  தாமதம்

ஜனநாயகன்’ படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இதனால் படம் வெளியாவதில் மேலும் தாமதம் ஏற்பட கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஒன்பதாம் திகதி வெளியாகவிருந்தது.

எனினும், தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாமையால் படத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், மதம் மற்றும் பாதுகாப்பு படை தொடர்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளதால், இந்த படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரை செய்தனர்.

இதை எதிர்த்து கே.வி.என். நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா, “இவ்வாறு மறுஆய்வு குழு பரிசீலனைக்கு பரிந்துரைத்தது செல்லாது. ‘ஜனநாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழை உடனே வழங்கவேண்டும்” என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை குழு உடனடியாக மேல்முறையீடு செய்து, தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை பெற்றது.

பின்னர், இந்த மேல்முறையீட்டு வழக்கை தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு விசாரித்து, தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த 20ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி, வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் ‘ஜனநாயகன்’ படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி பி.டி ஆஷாயின் உத்தரவை ரத்து செய்துள்ளனர்.

உரிய விளக்கம் அளிக்க தணிக்கை குழுவிற்கு அவகாசம் வழங்கவில்லை. படத்தில் சில காட்சிகள் சமூகத்தில் பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், வழக்கை விரைவாக மீண்டும் விசாரித்து புதிய உத்தரவு பிறப்பிக்க தனி நீதிபதி பி.டி ஆஷாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தணிக்கை குழு தலைவரின் முடிவுக்கு எதிராக படக்குழு மனு தக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )