தோனி விளையாடும் கடைசிப் போட்டி – திருவிழா போல் கொண்டாடுமாறு ரசிகர்களிடம் கோரிக்கை

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதி லீக் போட்டியில் சென்னை அணி இன்று விளையாடவுள்ள நிலையில், இந்தப் போட்டியை திருவிழா போல கொண்டாடுமாறு முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் ரசிகர்களை வலியுறுத்தியுள்ளார்.
ஏனெனில், ஒரு தலைவராகவும், அணியின் வீரராகவும் தோனியின் கடைசிப் போட்டியாக இது இருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று பகல் இடம்பெறவுள்ள சென்னை அணியின் கடைசி லீக் போட்டியை 43 வயதான தோனி வழிநடத்தவுள்ளார்.
தொடரின் ஆரம்பத்தில் சென்னை அணியின் தலைவராக ருதுராஜ் கெய்க்வாட் செயற்பட்டார். ஆனால் முழங்கை எலும்பு முறிவு காரணமாக அவர் தொடரின் பாதியிலேயே வெளியேறினார்.
இதனையடுத்து அணி நிர்வாகம் தலைமைப் பதவியை தோனியிடம் ஒப்படைத்தது. எனினும், சென்னை அணியின் தோல்வியை அவராலும் தடுக்க முடியவில்லை. துடுப்பாட்டம், பந்துவீச்சு என அனைத்து துறையிலும், சென்னை அணி பலவீனமாக காணப்படுகின்றது.
இந்நிலையில், தோனி இந்த தொடருடன் ஓய்வு பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இது குறித்து தோனி வெளிப்படையாக பேசவில்லை. தற்போது அடுத்த பதிப்பிற்கான அணியை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், குஜராத் அணியுடன் சென்னை அணி இன்று பகல் மோதவுள்ளது. இந்தப் போட்டியை ரசிகர்கள் ஒரு திருவிழா போல கொண்டாட வேண்டும், ஏனெனில் இது தோனியின் கடைசி போட்டியாக இருக்கலாம்.
அவர் ஒரு தலைவராகவும், வீரராகவும் கடைசியாக ஒரு முறை மைதானத்தில் நுழைவார். அவருக்கு அன்பைக் கொடுத்து மைதானத்தை மஞ்சள் வண்ணம் தீட்ட வேண்டும்,” என்று முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
“அவர் கடைசி போட்டியில் வெற்றி பெற விரும்புகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் தான் தோனி, தோனி தான் சென்னை சூப்பர் கிங்ஸ்.
எட்டு மாதங்கள் கிரிக்கெட்டிலிருந்து விலகியிருந்த பின்னர் மூன்று மாதங்கள் விளையாடுவது கடினம். இந்த ஆண்டு தோனி அதைப் புரிந்துகொண்டார்,” என்று முகமது கைஃப் மேலும் கூறினார்.