சீன ஹைனான் மாகாண மக்கள் காங்கிரஸின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சந்திப்பு

சீன ஹைனான் மாகாண மக்கள் காங்கிரஸின் நிலையியற் குழுவின் பிரதி பணிப்பாளர் யான் ஜிஜுன் அவர்களின் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர் நேற்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரை சந்தித்தனர்.
இதன்போது அமைச்சருடன் சுமுகமான கலந்துரையாடலில் ஈடுபட்ட ஹைனான் மாகாண மக்கள் காங்கிரஸின் நிலையியற் குழுவின் பிரதி பணிப்பாளர் இலங்கையின் அபிவிருத்திக்கு ஹைனான் மாகாணத்தினால் வழங்கக்கூடிய உதவிகள் தொடர்பிலும் அதற்காக மேற்கொள்ளும் நடைமுறைகள் தொடர்பிலும் விளக்கமளித்தார். அதன்படி, இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்தும் அவர் நினைவுபடுத்தினார். அத்துடன், அந்த மாகாணத்திற்கும் இலங்கைக்கும் இடையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையில் காணப்படும் நீண்ட நட்புறவை நினைவுபடுத்தினார்.இந்நாட்டின் வளர்ச்சிக்கு மேம்படுத்த வழங்கும் ஆதரவுகளை ஹைனான் மாகாணத்தின் மக்கள் காங்கிரஸின் அதிகாரிகளுக்கு நன்றியைத் தெரிவித்தார். அதற்கமைய, சீனா இதுவரை இலங்கைக்கு வழங்கிய ஆதரவுகளுக்கு நன்றியைத் தெரிவித்த அமைச்சர் இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு எதிர்காலத்திலும் சீனாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
அத்துடன் மீன்பிடித்துறை, சுற்றுலா, கலாசார பரிமாற்று நிகழ்ச்சிகள் மற்றும் புதிய பொருளாதார ஒத்துழைப்புகள் மூலமும் இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை விருத்தி செய்து கொள்ளும் வாய்ப்புகள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
2026 இல் ஹைனானில் நடைபெறும் சீன சர்வதேச நுகர்வோர் தயாரிப்பு கண்காட்சியில் அமைச்சரை பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தனர். இந்த அழைப்பை ஏற்ற அமைச்சர், இந்த கண்காட்சிக்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் பீ.கே. கோலித்த கமல் ஜினதாச, கடற்றொழில் மற்றும் கடல்வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ். ஜே. கஹாவத்தே. அமைச்சின் அதிகாரிகள், சீன ஹைனான் மாகாண மக்கள் காங்கிரஸின் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

