சர்வதேச போட்டிகளுக்கு விடை கொடுத்தார் மார்ட்டின் குப்தில்

சர்வதேச போட்டிகளுக்கு விடை கொடுத்தார் மார்ட்டின் குப்தில்

நியூசிலாந்து அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக மார்ட்டின் குப்தில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

எனினும், லீக் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குப்தில் தற்போது நியூசிலாந்தின் உள்நாட்டு டி20 போட்டியான சூப்பர் ஸ்மாஷில் ஆக்லாந்து அணிக்காக விளையாடி வருகிறார், மேலும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கிற்காக இஸ்லாமாபாத் யுனைடெட் அணியுடனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை 198 ஒருநாள் போட்டிகளில் 7346 ஓட்டங்களை குவித்துள்ளார் என்பதுடன், ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்து அணி சார்பில் அதிக ஓட்டங்களை குவித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

122 இருபது20 போட்டிகளில் 3531 ஓட்டங்களை குவித்துள்ள அவர், டி20 வடிவத்தில் நியூசிலாந்து அணி சார்பில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இருப்பினும், 2022 ஒக்டோபர் முதல் அவருக்கு நியூசிலாந்து தேசிய அணியில் இடம் வழங்கப்படவில்லை. இந்நிலையிலேயே, அவர் ஓய்வை அறிவித்துள்ளார்.

மேலும், தனது அணியின் சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், குறிப்பாக 19 வயதுக்குட்பட்டோர் மட்டத்திலிருந்து தனக்கு பயிற்சி அளித்து, தனது வாழ்க்கை முழுவதும் தொடர்ந்து ஆதரவாக இருந்த மார்க் ஓ’டோனலுக்கு நன்றி தெரிவிப்பதாக குப்தில் தெரிவித்துள்ளார்.

Share This