மன்மோகன் சிங் மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள் இரங்கல்
இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் தனது 92 ஆவது வயதில்
நேற்றிரவு காலமான நிலையில் இலங்கை அரசியல் பிரமுகர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கலாநிதி மன்மோகன் சிங் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவராக இருந்துள்ளதாக தெரிவித்த எதிர்கட்சித் தலைவர்
சஜித் பிரேமதாச அவருடைய பொருளாதார சீர்திருத்தங்கள் இந்தியாவை மாற்றியமைத்ததுடன் பிராந்தியத்தை ஊக்கப்படுத்தியது என தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இதனைப் பதிவிட்டுள்ளார். அவரது இரங்கலில்,
“ கலாநிதி மன்மோகன் சிங்கின் மறைவு மிகவும் கவலையளிக்கிறது. முன்னேற்றம் மற்றும் நேர்மைக்கான அவரது அர்ப்பணிப்பு எமக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும்.
இந்த இழப்பின் போது எங்களின் எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் இந்திய மக்களுடனும் உள்ளன” என பதிவிட்டுள்ளார்.
இதேவேளை, மன்மோகன் சிங் ஒரு தொலைநோக்கு பொருளாதார நிபுணர் என்றும், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கலின் சிற்பி என்றும், அவரது பங்களிப்புகள் இந்தியாவிற்கு ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர் பதிவிட்டிருப்பதாவது,
“முன்னாள் இந்தியப் பிரதமர் டொக்டர் மன்மோகன் சிங்கின் மறைவு பெரும் கவலையில் ஆழ்த்துகிறது.
அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இந்திய மக்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் சிறந்து விளங்கிய கலாநிதி மன்மோகன் சிங் நேர்மையாகச் செயற்பட்டார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இரங்கல் வெளியிட்டுள்ளார்.
“ இந்திய மக்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கல்கள். நவீன இந்தியாவின் பொருளாதார மறுமலர்ச்சியின் சிற்பியான ஒரு சிறந்த மனிதர், இலங்கையில் தமிழ்த் தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உண்மையாக உழைத்தவர் ” என சுமந்திரனும் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங் சுமார் 33 ஆண்டுகள் மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்திருக்கிறார்.
ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தியைத் தொடர்ந்து இந்திய வரலாற்றில் மூன்றாவது மிக நீண்டகாலம் பிரதமர் பதவியில் இருந்தவர் என்ற பெருமையும் அவரையே சேரும்.