பரிகார பூஜை செய்வதாக கூறி தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபர் – சிலாபத்தில் சம்பவம்

தீய சக்திகளை விரட்ட பரிகார பூஜை செய்வதாக கூறி 3.8 மில்லியன் ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள் திருடப்பட்ட சம்பவம் குறித்து சிலாபம் பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தை எதிர்கொண்ட நபர் சிலாபம், முன்னேஸ்வரத்தில் வசிப்பவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மாதம் முதல் திகதி முன்னேஸ்வரம் கோவிலுக்கு அருகே சந்தித்த மூன்று பேரில் ஒருவர் தனக்கு ஜோதிடம் கூறியதாகவும் அந்த கணிப்பின்படி, தானும் தனது குழந்தைகளும் மிகவும் கடினமான நேரத்தை எதிர்கொண்டதாகவும் முறைப்பாட்டாளர் தெரிவித்தார்.
ஆகையினால், அதிலிருந்து விடுபட ஒரு பூஜை செய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் பாதிக்கப்பட்டவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அந்த யோசனையின் அடிப்படையில், தான் சந்தித்த மூன்று பேரில் ஒருவரை மூன்றாம் திகதி தனது வீட்டிற்கு அழைத்து வந்து பூஜை நடத்தியதாக அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
சந்தேகநபர் கூறியது போல், தனக்கும், தன் மனைவிக்கும், தன் குழந்தைகளுக்கும் சொந்தமான தங்க நகைகளை ஒரு பானையில் வைத்து, பூஜை நடத்துபவரிடம் கொடுத்துள்ளனர்.
சடங்கு செய்தவரின் அறிவுறுத்தல்களின்படி, முழு குடும்பத்தினரும் வீட்டின் முன் கற்பூரத்தை ஏற்றி தெய்வத்திற்கு காணிக்கை செலுத்தினர் என்றும், அந்த நபர் தங்க நகைகள் உள்ள பானையை பூஜை அறையில் வைக்குமாறும், நான்கு நாட்களுக்கு பானையைத் திறக்கக் கூடாது என்றும் வீட்டினரிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது.
எனினும், சந்தேகத்தின் பேரில் நான்காம் திகதி காலை தங்க நகைகள் இருந்த பானையைத் திறந்தபோது, அதில் எதுவும் இல்லை என்று புகார்தாரர் பொலிஸாரிடம் மேலும் கூறியுள்ளார்.
மேலும், தனது வீட்டிற்கு வந்து பூஜை செய்வதவர் இந்திய நாட்டவராக இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர் மேலும் தெரிவித்துள்ளார்.