நான்கு ஆண்டுகளின் பின்னர் முதலிடம் பிடித்தார் கோலி

நான்கு ஆண்டுகளின் பின்னர் முதலிடம் பிடித்தார் கோலி

இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி மீண்டும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 93 ஓட்டங்களை குவித்ததன் மூலம், விராட் கோலி முதலிடம் பிடித்துள்ளார்.

ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்டு வரும் அவர், கடைசியாக விளையாடி ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓட்டங்களை குவித்துள்ளார்.

1,404 நாட்கள் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, கோலி மீண்டும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

உலகின் மிகச்சிறந்த ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் கோலி 2021ஆம் ஆண்டு பாகிஸ்தானின் பாபர் அசாமிடம் முதலிடத்தை பறிகொடுத்தார்.

இந்நிலையில், நான்கு ஆண்டுகளின் பின்னர் தற்போது முதலிடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தை பிடிப்பதற்கு நியூசிலாந்தின் டேரில் மிட்செலுடன் கடுமையான போட்டியை எதிர்கொண்டார்.

இறுதியில் 785 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தை 784 புள்ளிகளுடன் டேரில் மிட்செல் பிடித்துள்ளார்.

ரோகித் சர்மா இரண்டு இடங்கள் பின் தங்கி 775 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ஓட்டங்களை கடந்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமார் சங்கக்காரவுக்குப் பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் 28,000 ஓட்டங்களை கடந்த உலகின் மூன்றாவது துடுப்பாட்ட வீரர் என்ற பெருமையை கோலி படைத்துள்ளார்.

கோலி 624 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்தினார், இதன் மூலம் வேகமாக இந்த சாதனையை நிகழ்த்திய வீரர் என்ற பெருமையையும் கோலி படைத்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )