கோலி மற்றும் சர்மா சிறந்த முடிவுகளை எடுப்பார்கள் – கம்பீர் நம்பிக்கை
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் இந்திய கிரிக்கெட்டுக்காக சிறந்த முடிவுகளை எடுப்பார்கள் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
சிட்னியில் இடம்பெற்ற போர்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் இறுதிப் போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக மோசமான பார்மில் இருக்கும் ரோகித் மற்றும் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார்கள் என்ற வதந்திகளுக்கு மத்தியில் கம்பீரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.
கோலியும், ரோகித்தும் ஆர்வத்துடன் விளையாடும் கடினமான வீரர்கள். இந்திய கிரிக்கெட்டுக்காக அவர்கள் சிறந்த முடிவை எடுப்பார்கள் என்று கம்பீர் கூறியுள்ளார்.
வீரர்கள் தேசிய அணியில் விளையாடினாலும், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் கம்பீர் மேலும் கூறினார்.
“எந்த வீரரின் எதிர்காலம் குறித்தும் நான் பேசவில்லை, அது குறித்து அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். தங்கள் அர்ப்பணிப்பையும் உற்சாகத்தையும் அப்படியே வைத்திருக்கும் இரண்டு நட்சத்திரங்கள் அவர்கள்.
இருவரும் இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடிந்த அனைத்தையும் செய்வார்கள் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கம்பீர் தலைமையில் இந்திய அணிக்கு இது இரண்டாவது டெஸ்ட் தொடர் தோல்வியாகும். சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா முழு தோல்வியை தழுவியது.
ரோகித் மோசமான பார்ம் காரணமாக ஐந்தாவது டெஸ்டில் இருந்து விலகினார். இதனையடுத்து ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்தினார்.
அதேபோல் விராட் கோலி இந்த தொடர் முழுவதும் ஆஸி. பந்துவீச்சாளர்களின் ஆப்-சைட் வலையில் சிக்கினார். ஐந்து போட்டிகளில் அவர் 23.72 சராசரியில் வெறும் 190 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டார்.
சிட்னி டெஸ்டில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த அவுஸ்திரேலியா, பத்து ஆண்டுகளுக்குப் பிறகு போர்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியையும் உறுதி செய்தது.