யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் அடுத்த மாத இறுதிக்குள் மீள ஆரம்பிக்கப்படும்

யாழ்ப்பாணம் மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பித்தல் தொடர்பான கலந்துரையாடல் வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ வசந்த சமரசிங்க, தலைமையில் நேற்றைய தினம் (12.08.2025) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் ஆர்.எச் .உபாலி சமரசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன், வர்த்தக, வணிக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் உபுல் டி சில்வா, பிரதம ஆலோசகர் சாந்தா ஜெய ரட்ண ஆகியோரும் பங்குபற்றியிருந்தார்கள்.
இக்கலந்தரையாடலில் வரவேற்பு உரையாற்றிய அரசாங்க அதிபர், இன்றைய கலந்துரையாடலுக்கு வருகைதந்த அமைச்சர், வடமாகாண ஆளுநர், பிரதி அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அனைவரையும் வரவேற்று, மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையமானது ரூபா 198.80 மில்லியன் செலவில் நிர்மாணக்கப்பட்டும் தற்போது இயங்காத நிலையில் உள்ளதாகவும் அதனை மீள ஆரம்பிப்பதற்கான செயற்பாடுகள் குறித்து அமைச்சர் தலைமையில் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், யாழ்ப்பாண பொருளாதார வளர்ச்சியில் இந் நிலையம் ஓர் மைல்கல்லாக அமைய வேண்டும் எனவும் மீள ஆரம்பிப்பதற்கான விவசாயம் சார் அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும் எனவும் அதற்கு அமைச்சர் முன்வந்து நடவடிக்கை எடுப்பது வரவேற்க்கத்தக்கது எனவும் தெரிவித்து, அமைச்சர் அவர்களிடன் தேவைப்பாடுகள் மற்றும் கருத்துக்களை முன்வைக்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அமைச்சர், யாழ்ப்பாண பொருளாதார மத்திய நிலையத்தை அடுத்த மாத இறுதிக்குள் மீள ஆரம்பிப்பது மற்றும் அதனை அபிவிருத்தி செய்தல் தொடர்பான கலந்துரையாடலாக அமையவுள்ளதாகவும், இலங்கையை பொறுத்தவரை 18 பொருளாதார மத்திய நிலையங்கள் காணப்படுவதாகவும் 14 இயங்கி வருவதாகவும் வடக்கில் அண்ணளவாக ரூபா. 200 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் இயங்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இந் நிலையம் மக்களுக்கு பொருத்தமான பாதையாக காணப்படவில்லை எனவும் பிரதேச செயலகத்தின் கீழ் செயற்பாடுகள் நடைபெறுவதாகவும் அமைச்சின் கீழ் எந்தவொரு செயற்பாடும் காணப்படவில்லை எனவும் தெரிவித்ததுடன், இந் நிலையத்ததை மீள அடுத்த மாத இறுதிக்குள் ஆரம் பிப்பதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவித்து அனைவரதும் ஒத்துழைப்புக்களையும் நல்குமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும், இக் கலந்துரையாடலில் பொருளாதார மத்திய நிலையத்துக்குரிய கடை உரிமையாளர்களின் தேவைப்பாடுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலுக்கு முன்னராக கெளரவ அமைச்சர் தலைமையிலான குழுவினர் மட்டுவிலில் அமைந்துள்ள பொருளாதார மத்திய நிலையத்தை பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் சாவகச்சேரி பிரதேச செயலாளர், பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர், மாவட்ட விவசாயப் பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட பிரதம பொறியியலாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், சாவகச்சேரி பிரதேச சபையின் செயலாளர், பொருளாதார மத்திய நிலைய முகாமையாளர், வர்த்தக பிரதிநிதிகள் மற்றும் பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளை குத்தகைக்கு எடுத்த குத்தகைக்கார்கள் கலந்துகொண்டனர்.