“ட்ரம்பின் வரிப் பட்டியலில் இலங்கையை பார்ப்பது ஆச்சரியமாக இருக்கிறது” – சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியர்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள வரிப் பட்டியலில் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் பெயர்களை பார்ப்பதில் ஆச்சரியத்தை தருவதாக சிகாகோ பல்கலைக்கழக பொருளாதாரப் பேராசிரியர் பிரெண்ட் நெய்மன் தெரிவித்துள்ளார்.
சிஎன்என் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய கட்டணத் திட்டங்கள் குறித்த சிஎன்என் தொலைக்காட்சி விவாதத்தின் போது இலங்கை எதிர்பாராத விதமாக முன்னிலைப்படுத்தப்பட்டது.
இலங்கையை வரிப் பட்டியலில் இணைத்துள்ளதன் பின்னணியில் உள்ள தர்க்கத்தை தொகுப்பாளர் எரின் பர்னெட் மற்றும் சிகாகோ பல்கலைக்கழக பொருளாதாரப் பேராசிரியர் பிரெண்ட் நெய்மன் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
“அமெரிக்கா இலங்கையிலிருந்து அதிகளவான ஆடைகளை கொள்வனவு செய்கின்றது. எனினும், இலங்கை அமெரிக்காவிலிருந்து அதிக எரிவாயு விசையாழிகளை வாங்குவதில்லை.
இது வர்த்தக ஏற்றத்தாழ்வு அல்லது. மேலும் அது சரிசெய்யப்பட வேண்டிய ஒன்று என எரின் பர்னெட் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இலங்கை, ஜோர்தான் மற்றும் சாம்பியா போன்ற நாடுகளை வரிப் பட்டியலில் பார்ப்பதில் ஆச்சரியத்தை வெளிப்படுத்திய பேராசிரியர் பிரெண்ட் நெய்மன், இந்த உணர்வை எதிரொலித்தார்.
மேலும், வரி உத்தி பரஸ்பர வர்த்தகம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதில் “தவறான தத்துவத்தை” பிரதிபலிக்கிறது என்று பேராசிரியர் பிரெண்ட் நெய்மன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, சீன இறக்குமதிகள் மீதான வரிகள் 125 சதவீதம் உயர்த்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
சீனப் பொருட்களுக்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த 10 சதவீத வரிகளை மார்ச் மாத துவக்கத்தில் 20 சதவீதமாக ட்ரம்ப் உயர்த்தினார். அதன்பின், பரஸ்பர வரிவிதிப்பு என்ற வகையில் கடந்த வாரம் 34 சதவீத கூடுதல் வரியை விதித்தார்.
இதன்மூலம் சீன பொருட்கள் மீதான இறக்குமதி வரியானது 54 சதவீதமாக உயர்ந்தது. அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடியாக சீனாவும் 34 சதவீத கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்தது. இதனால் ட்ரம்ப் கடும் அதிருப்தி அடைந்தார்.
மேலும், சீன இறக்குமதிக்கு கூடுதலாக 50 சதவீத வரி விதித்தார். இதன்மூலம் சீனாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் மொத்த வரி 104 சதவீதமாக அதிகரித்தது.
இந்த வரிவிதிப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. இதனால், உலக அளவில் பெரும் வர்த்தகப்போர் ஏற்பட்டுள்ளது.
இதற்கும் அசராத சீனா, மேலும் 50 சதவீத வரியுடன் அமெரிக்க பொருட்கள் மீதான வரியை 84 வீதமாக அதிகரிப்பதாக நேற்று அறிவித்தது.
அத்துடன், அமெரிக்க இராணுவத்திற்காக பணிபுரியும் இரண்டு நிறுவனங்கள் உட்பட 11 நிறுவனங்களுக்கு இரட்டை பயன்பாட்டு பொருட்களை விற்க சீனா தடை விதித்துள்ளது.
இந்நிலையில், சீன இறக்குமதிகள் மீதான வரிகள் 125 சதவீதம் உயர்த்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.