
10க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 3065 அரச பாடசாலைகள் இருப்பதாக தகவல்!
நாடு முழுவதும் 10க்கும் குறைவான ஆசிரியர்களைக் கொண்ட 3,000க்கும் மேற்பட்ட அரச பாடசாலைகள் இருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, நாடு முழுவதும் 10,047 பாடசாலைகள் உள்ளன.
அவற்றில் 3,065 பாடசாலைகளில் 10க்கும் குறைவான ஆசிரியர்கள் இருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அந்தப் பாடசாலைகளில் ஒன்று தேசியப் பாடசாலை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 1,645 அரச பாடசாலைகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அரச பாடசாலைகளில், ஒரு தேசியப் பாடசாலைகளும், 1,644 மாகாணப் பாடசாலைகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
51 முதல் 100 மாணவர்கள் வரை உள்ள 1,648 அரச பாடசாலைகள் இருப்பதாகவும், அந்தப் பாடசாலைகள் அனைத்தும் மாகாணப் பாடசாலைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 2024 உடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டில் அரச பாடசாலைகளில முதலாம் தரத்திற்கு சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் தரம் 1 இல் 266,281 மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
