மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம்

மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம்

உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசிமென அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்ட இரண்டு முக்கிய ஒழுங்குவிதிகள் மற்றும் மீனவர்களின் நலன்கள் குறித்து நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சேற்று நண்டுகளைப் பிடிப்பது தொடர்பாக எமது நாட்டுக்கே உரிய ஒழுங்கு விதிகள் அவசியமானவை. குறிப்பாக, சிறிய நண்டுகள் மற்றும் கருவுற்றிருக்கும் நண்டுகளைப் பிடிப்பதன் மூலம் இயற்கை வளங்களுக்குப் பாரிய அனர்த்தம் ஏற்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

1996ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் சட்டத்தின் 61ஆம் பிரிவின் கீழ், 2024 பெப்ரவரி 15ஆம் திகதி வெளியிடப்பட்ட 2371/35ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் படி இந்த ஒழுங்குவிதிகள் அமைகின்றன.

ஐரோப்பிய நாடுகளுக்கு கடல் உணவுகளை ஏற்றுமதி செய்யும் போது, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடுமையான ஒழுங்குவிதிகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது.

கடந்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் இலங்கைக்கு வந்து நேரடியாகப் படகுகளை ஆய்வு செய்தனர். அங்கு சட்டவிரோத வலைகள் அல்லது தடைசெய்யப்பட்ட முறைகள் பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டால், அந்த நாட்டுக்கு மீன் ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்படலாம்.

இவ்வாறான இக்கட்டான சூழலில், அமைச்சின் செயலாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் கடுமையாக உழைத்து அந்தப் பாதுகாப்பை உறுதிப்படுத்தினர்.

உலக நடைமுறைக்கு ஏற்ப, 130 மில்லிமீட்டர் சுற்றளவுக்குக் குறைவாக உள்ள நண்டுகளைப் பிடிப்பது மற்றும் வளர்ப்பது தொடர்பாகச் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

தடை செய்யப்பட்ட வலைகள் அல்லது சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்திப் பிடிக்கப்படும் மீன்கள் ஏற்றுமதிக்கு நிராகரிக்கப்படுகின்றன.

கடந்த வருடம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆய்வுகளின் போது இவ்வாறான தடைகள் ஏற்படாமல் அமைச்சின் அதிகாரிகள் மூலம் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தருவதில் சேற்று நண்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன, எனவே அவற்றின் உற்பத்தியை அதிகரிக்கவும் வளங்களைப் பாதுகாக்கவும் இந்த ஒழுங்குவிதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

நாட்டின் வருமானத்துக்காகவும், மக்களின் ஊட்டச்சத்துக்காகவும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது அவசியம்.

தற்போது சமூகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற விவாதங்கள் நடந்து வரும் சூழலில், உண்மையாக உழைக்கும் மீனவர்களுக்கு முறையான ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

கடந்த காலங்களில் கொண்டுவரப்பட்ட ஓய்வூதியத் திட்டங்கள் பல தோல்வி அடைந்துள்ளன அல்லது செயலற்றுப் போயுள்ளன. எனவே, மீனவர்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஒரு வலுவான ஓய்வூதிய முறையை விரைவாக நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இது மீனவர்கள் வயதான காலத்தில் வறுமையின்றி வாழவும், இளைஞர்களை இந்தத் தொழிலில் ஈர்க்கவும் இந்தத் திட்டம் உதவும்.

அண்மையில் ஏற்பட்ட டிட்வா சூறாவளி காரணமாக மீனவர்கள் பெரும் அழிவைச் சந்தித்துள்ளனர்.

இந்த சூறாவளியால் 13 பலநாள் படகுகள் முற்றாக அழிந்துள்ளன. மேலும் 215 பாரம்பரியப் படகுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன மற்றும் மூன்று உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மீனவர்களுக்குத் தேவையான வலைகள் மற்றும் படகுகளை இலவசமாக மீளப் பெற்றுக்கொடுப்பதற்கும், தேவையான மானியங்களை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இறுதியாக, மீனவர்களின் சொந்த நிதியின் மூலம் பலப்படுத்தப்படும் இந்த ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தச் சபையின் ஒத்துழைப்பை அவர் கோரினார்.

நாட்டின் அந்நியச் செலாவணியைப் பெற்றுத்தருவதில் சேற்று நண்டுகள் பாரிய பங்கினை வகிக்கின்றன.

மீனவர்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்து நாட்டின் வருவாய்க்காகவும், மக்களின் புரதச்சத்து தேவையை நிவர்த்தி செய்யவும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறார்கள் என்று அவர் பாராட்டு தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )