வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அடித்தளம் இல்லை என்பது தெளிவாகிறது!
ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பார்க்கும்போது, தற்போதைய அரசாங்கம் தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அடித்தளத்தை அமைக்கத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபர ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.
பிரதான பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த பேராசிரியர்,
அவர்கள் தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு வெவ்வேறான வாக்குறுதிகளை வழங்கியது மாத்திரமன்றி கொள்கை விளக்கவுரையிலும் வெவ்வேறான விடயங்கள் உள்ளடக்கப்பட்டன.
2025 பட்ஜெட்டில் குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அடிப்படை அடித்தளத்தை இட வேண்டிய கட்டாயம் இருந்தது. எனினும், அவ்வாறான அடித்தளத்தை தயாரிப்பதற்கான தயார் நிலை ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பார்க்கும் போது எங்களுக்கு தெரியவில்லை.
உண்மையிலேயே, அரசாங்கத்திற்கு இந்த வரவு-செலவு திட்டத்தை சர்வதேச நாணய நிதியத்தின் வழிக்காட்டல்களுக்கு அமைவாக திட்டமிட வேண்டிய நிலை உள்ளது என்பது உண்மை.
சர்வதேச நாணய நிதியமும் ஒரு சில வழிக்காட்டல்களை வழங்கியுள்ளன. உண்மையிலேயே, எங்களுக்கு சர்வதேச நாணய நிதியம் வழங்கிய வழிக்காட்டல்களை விட முன்னோக்கி செல்ல முடியும். எனினும், பின்னோக்கி பயணிக்க முடியாது. இந்தப் புரிதலுடன் பொருளாதார வல்லுநர்கள் திட்டங்களைத் தயாரிக்க வேண்டும்.
உண்மையில், கடந்த நிலைமைகளுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டில் பொருளாதாரம் ஒரு நல்ல அடித்தளத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
இப்போது அந்த நிலையான பொருளாதாரத்தை வளர்ச்சியடைய செய்ய வேண்டும்.
நாங்கள் உண்மையிலேயே எதிர்பார்ப்பது அதற்கான வளர்ச்சிக்கான பட்ஜெட்டைத்தான்.
அரசாங்கம் அதை நோக்கிச் செயல்பட வேண்டும் என்பது எனது கருத்து.
எனினும், அது அரசாங்கத்தின் தரப்பில் நடக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை.” எனத் தெரிவித்தார்.