காசா மீதான இஸ்ரேலின் படையெடுப்பு தீவிரம் – மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற்றம்

காசா நகர் மீது தரைவழி படை நடவடிக்கையை ஆரம்பித்து அங்கு உக்கிர தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் அங்குள்ள ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் வெளியேறுவதற்கு தற்காலிகமான புதிய பாதை ஒன்றை திறந்துள்ளது.
காசா நகரின் மீது சரமாரி குண்டு மழை பொழிந்து வரும் இஸ்ரேலியப் படை அந்த நகர மையப்பகுதியை நோக்கி படையினர் மற்றும் டாங்கிகளையும் முன்னேறச் செய்து வருகிறது. ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழு காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுவதாக அறிக்கை வெளியிட்டிருக்கும் நிலையிலேயே இஸ்ரேலிய இராணுவம் கடந்த செவ்வாய்க்கிழமை (16) தரைவழி படை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
தாக்குதல்கள் உக்கிரம் அடைந்ததை அடுத்து காசா பகுதியின் பிரதான நகர்புறமாக உள்ள காசா நகரில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் சலாஹ் அல் தீன் வீதி வழியாக காசா நகரில் இருந்து மக்கள் வெளியேற தற்காலிக பாதை ஒன்றை இஸ்ரேல் இராணுவம் நேற்று திறந்தது.
இன்று (18) நண்பகலில் இருந்து 48 மணி நேரத்திற்கு இந்தப் பாதை திறந்திருக்கும் என்று இஸ்ரேல் இராணுவத்தின் அரபு மொழி பேச்சாளர் கர்ணல் அவிசாய் அட்ராயீ குறிப்பிட்டுள்ளார். இதுவரை கடற்கரை பாதை வழியாக மேலும் தெற்காக ‘மனிதாபிமான வலயத்திற்கு’ செல்லும்படியே காசா நகர மக்களை இஸ்ரேலிய இராணுவம் வலியுறுத்தி வந்தது.
காசா பகுதியின் மத்தியில் இருந்து சலாஹ் அல் தீன் பாதை வடக்கு தொடக்கம் தெற்கு வரை நீண்டுள்ளது.
காசா நகர் மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதியில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் தங்கி இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கடந்த ஓகஸ்ட் கடைசியில் மதிப்பிட்டிருந்தது. அண்மைய வாரங்களில் காசா நகரை கைப்பற்றும் திட்டத்தை ஆரம்பித்து அந்த நகர் மீது இஸ்ரேலிய படை கடுமையான தாக்குதல்களை ஆரம்பித்தது தொடக்கம் மக்கள் நகரை விட்டு தப்பிச்செல்ல ஆரம்பித்துள்ளனர்.
எனினும் காசா நகர் மாத்திரம் அன்றி காசா பகுதியில் எந்த இடமும் பாதுகாப்பானதாக இல்லை என்று பலஸ்தீனர்கள் கூறி வருகின்றனர். மீண்டும் ஒருமுறை வெளியேறிச் செல்வதை விடவும் தமது வீட்டிலேயே உயிரிழப்பது மேலானது என்று பலரும் குறிப்பிட்டிருப்பதாக ஏ.எப்.சி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘நாம் காசா நகரை விட்டு வெளியேற முன்வந்தாலும் கூட, மீண்டும் திரும்பி வருவதற்கு ஏதேனும் உத்தரவாதம் உள்ளதா? போர் முடிவுக்கு வருமா? அதனாலேயே நாம் இங்கேயே மரணிப்பதற்கு விரும்புகிறோம’ என்று காசா நகரில் வசிக்கும் ஆசிரியர் ஒருவரான அஹமது என்பவர் தொலைபேசி ஊடாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
காசா நகரில் இருந்து வெளியேறி வரும் மக்கள் மீது இஸ்ரேலியப் படை தாக்குதல்களை நடத்தி வருவதாக அங்கருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. காசா நகரில் இருந்து வெளியேறும் மக்களை ஏற்றிய கார் ஒன்றின் மீது இஸ்ரேல் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் ஐவர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
ஏற்கனவே காசா நகர் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களால் இடிபாடுகளாக மாற்றப்பட்டுள்ளது.
‘பாதுகாப்பாக உறங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளைக் கொன்று அவர்களின் உடல்களை துண்டு துண்டாக ஏன் சிதைக்கிறார்கள்?’ என்று காசாவைச் சேர்ந்த அபூ அப்த் சகூத் கேள்வி எழுப்பினார். ‘நாம் குழந்தைகளை உடல் பாகங்களாக மீட்டு வருகிறோம்’ என்று அவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.
காசா நகரின் மேற்காக உள்ள ஷட்டி அகதி முகாமின் ஈத்யா வீதியில் உள்ள குடியிருப்பு கட்டடம் ஒன்றில் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் குழந்தை மற்றும் தாய் உட்பட பலர் கொல்லப்பட்டிருப்பதாக சுகாதார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. காசா நகரில் 17 குடியிருப்பு கட்டங்களை இஸ்ரேலிய படை தாக்கி அழித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்றுமுன்தினம் காலை தொடக்கம் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் குறைந்தது 37 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு இவர்களில் காசா நகரைச் சேர்ந்த 24 பேர் உள்ளடங்குவதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
இரண்டு ஆண்டுகளை நெருங்கி உள்ள காசா போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 65 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
காசா நகர் மீதான தரைவழி படை நடவடிக்கைக்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் வெளியாகி வருகின்றன. காசா நகரின் மையப் பகுதியில் இருந்து ஒரு சில கிலோமீற்றர் தொலைவிலேயே இஸ்ரேலிய படைகள் நிலைகொண்டுள்ளன. எனினும் தற்போது வரை அந்தப் படை குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் காணவில்லை என்று அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
காசா நகரில் இருந்து மக்களை தெற்கை நோக்கி வெளியேற்றுவதிலேயே பிரதானமாக அவதானம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் அடுத்து வரும் மாதங்களில் மோதல் உக்கிரம் அடையக் கூடும் என்றும் இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.