காசாவில் இஸ்ரேல் தாக்குதல் – 33 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

காசாவில் இஸ்ரேல் தாக்குதல் – 33 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

காசாவில் இஸ்ரேல் முன்னெடுத்துள்ள விமானத் தாக்குதல்களில் குறைந்தது 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு நிறுவனம் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் இதனை தெரிவித்தனர்.

அமெரிக்காவால் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி, இஸ்ரேல் இந்தத் தாக்குதல்களை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா நகரம், பெய்ட் லாஹியா, அல்-புரைஜ், நுசைரத் மற்றும் கான் யூனிஸ் ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், பாடசாலைகள் மற்றும் குடியிருப்புத் தொகுதிகள் இவ்வாறு தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், செவ்வாயன்று காசாவில் இஸ்ரேலிய வீரர்களைத் தாக்கியதாகவும், இறந்த பணயக்கைதிகளின் உடல்களைத் திருப்பி அனுப்புவதற்கான விதிமுறைகளை மீறியதாகவும் ஹமாஸ் மீது குற்றம் சாட்டினார்.

எவ்வாறாயினும்,  இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் “எந்தத் தொடர்பும்” இல்லை என்றும், போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் ஹமாஸ் தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, “தொடர்ச்சியான குண்டுவீச்சு மற்றும்  மிகவும் கடினமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் மீட்புக் குழுக்கள் பணியாற்றி வருவதாக” காசாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

“காணாமல் போனவர்களில் சிலர் இன்னும் இடிபாடுகளுக்குள் உள்ளனர் எனவும், இதனால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “பலமான தாக்குதல்களுக்கு” உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தாக்குதல் உத்தரவிற்கான காரணங்களைக் குறிப்பிடவில்லை.

எவ்வாறாயினும், செவ்வாயன்று காசாவில் இஸ்ரேலிய வீரர்கள் மீது தாக்குதலை நடத்தியதன் மூலம் ஹமாஸ் “எச்சரிக்கை எல்லையை” கடந்து விட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This