தீவிரமான போர் தொடரும் என ஹமாஸுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை
![தீவிரமான போர் தொடரும் என ஹமாஸுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை தீவிரமான போர் தொடரும் என ஹமாஸுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை](https://oruvan.com/wp-content/uploads/2025/02/netanyahu.webp)
பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் மீண்டும் தீவிரமான போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹமாஸுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் ஒப்பந்தத்தை மீறியதாக ஹமாஸ் குற்றம் சுமத்தி, பணயக்கைதிகள் விடுதலையை மறு அறிவிப்பு வரை ஒத்திவைப்பதாக அறிவித்தது.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில்,பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் மீண்டும் தீவிரமான போர் தொடரும் என கூறிய நெதன்யாகு காசாவிற்கு உள்ளேயும் வெளியேயும் இஸ்ரேலியப் படைகளை குவிக்க உத்தரவிட்டதாக தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள 76 பணயக்கைதிகளையும் விடுவிக்கக் கோருகிறாரா, அல்லது இந்த சனிக்கிழமை விடுவிக்கப்படவுள்ள மூவரை மட்டும் கோருகிறாரா என்பதை நெதன்யாகு தெரிவிக்கவில்லை.
அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் மேற்கொண்ட மத்தியஸ்த பேச்சுவார்த்தையின் பலனாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன் அடிப்படையில் இஸ்ரேல் கைதிகள் மற்றும் பலஸ்தீனிய கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஒப்பந்தத்தின் பல கட்ட அணுகுமுறையை முற்றிலுமாக நிராகரித்து, அனைத்து பணயக்கைதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிக்க ஹமாஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்க பரிந்துரைத்துள்ளார்.