சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சனா? – ராஜஸ்தான் நிர்வாகம் மறுப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) ஐபிஎல் அணியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் சஞ்சு சாம்சன் இணையப் போவதாக வந்துள்ள செய்திகளை ராஜஸ்தான் நிர்வாகம் மறுத்துள்ளது.
கடந்த மே மாதம் முடிவடைந்த 18வது ஐபிஎல் தொடரில், பஞ்சாப் கிங்சை வீழ்த்தி ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை கைப்பற்றியது. இந்த சீசனில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஒன்பதாவது இடத்தை பிடித்து வெளியேறியது.
மேலும் இந்த சீசனில் பெரும்பாலான போட்டிகளில் காயம் காரணமாக சஞ்சு சாம்சன் பங்கேற்க முடியவில்லை. சஞ்சு சாம்சன் இல்லாத போட்டிகளின்போது இளம் வீரர் ரியான் பராக் அணிக்கு தரைவராக இருந்து வழிநடத்தினார்.
இந்நிலையில், இந்த சீசனில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்துக்கும் சஞ்சு சாம்சனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக செய்திகள் உலா வந்தன. இதனால் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த சூழலில் சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் மாற்ற ராஜஸ்தான் அணி நிர்வாகம் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டது.
ஒருவேளை, சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் அணி, சிஎஸ்கே அணிக்கு டிரேடிங் முறையில் கொடுக்கும் பட்சத்தில் அவருக்கு பதிலாக அதிரடி ஆல் ரவுண்டர் ஷிவம் துபே மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை தருமாறு கேட்பதாகவும் தகவல் வெளியாகியது.
ஆனால், இந்தத் தகவல்களை ராஜஸ்தான் அணி நிர்வாகம் மறுத்துவிட்டது. சஞ்சு சாம்சன், ராஜஸ்தான் அணியிலேயே தொடர்வார் என ராஜஸ்தான் அணியின் நிர்வாக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.