ஏப்ரல் 15 பொது விடுமுறையா? – அரசாங்க தரப்பில் இருந்து விசேட அறிவிப்பு

ஏப்ரல் 15 பொது விடுமுறையா? – அரசாங்க தரப்பில் இருந்து விசேட அறிவிப்பு

ஏப்ரல் 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறி சமூக ஊடகங்களில் பரவும் செய்தி முற்றிலும் தவறானது என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அரசாங்க தகவல் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

புத்தாண்டு சீசன் காரணமாக ஏப்ரல் 15ஆம் திகதி பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக சில சமூக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக அரசாங்க தகவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அரசாங்கம் இதுவரை அத்தகைய அதிகாரப்பூர்வ விடுமுறையை அறிவிக்கவில்லை என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏப்ரல் 15 ஆம் திகதி பொது விடுமுறையாக அறிவிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன இன்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இந்த விடயம் இன்னும் பரிசீலனையில் இருப்பதாகக் கூறினார்.

குறிப்பிட்ட வாரத்தில் புனித வெள்ளி (ஏப்ரல் 18) அடங்கும் என்றும், அது ஏற்கனவே பொது விடுமுறை என்றும், அந்த வாரத்திற்கு மூன்று வேலை நாட்கள் மட்டுமே உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சூழலில், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டைக் கருத்தில் கொண்டு, ஏப்ரல் 15 ஆம் திகதியை கூடுதல் விடுமுறையாக அறிவிப்பதா என்பது குறித்து அரசாங்கம் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

Share This