
தந்தையின் பாதையில் மகன் – திரைமறைவிலிருந்து ஈரானின் அதிகார உச்சிக்குச் சென்ற மொஜ்தபா
ஈரானின் புதிய உச்சத் தலைவராக மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களின் ஆரம்ப தாக்குதலில் தெஹ்ரான் நகரில் உள்ள தனது வளாகத்தில் உயிரிழந்த அவரது தந்தை அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) க்கு பதிலாக அவர் பதவி ஏற்றுள்ளார்.
மொஜ்தபா ஹொசைனி கமேனி (Mojtaba Hosseini Khamenei), அந்நாட்டின் அடுத்த உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்ட நிலையில் இந்த நியமனம் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் மேலதிக விபரங்களும் ஈரானிய அரசாங்கத்தினால் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கமைய 80 பேர் கொண்ட நிபுணர்கள் சபை புதிய அதி உயர் தலைவரை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்த நிலையில், நேற்று இந்த முடிவை இறுதி செய்துள்ளதாக ஈரானிய அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
56 வயதான மொஜ்தபா கமேனி, திரைமறைவில் பெரும் செல்வாக்கு செலுத்தும் நபர் ஒருவராகக் கருதப்பட்டார்.
பாசிஜ் துணை இராணுவப் படையை வழிநடத்தியது மற்றும் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படையுடன் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்தது போன்ற குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளன.
எனினும் இவ்வாறான யூகங்கள் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்த போதிலும், அவர் இதுவரை இஸ்லாமிய குடியரசில் எந்தவொரு அதிகாரப்பூர்வ பதவியையும் வகிக்கவில்லை.
கடந்த காலத்தில் மொஜ்தபா கமேனியின் பெயர் இந்தப் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமது செல்வாக்கை வளர்த்தெடுத்த அவரது தந்தையைப் போன்ற ஒரு தலைவராக உருவெடுப்பதற்கு சில காலம் எடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
ஆட்சியின் உயர்மட்டப் பிரிவுகளுக்கு இடையே நிலவும் பல்வேறு பிளவுகளைச் சரிசெய்யும் ஒரு மத்தியஸ்தராகச் செயல்படுவதே இப்போது அவரது முக்கியப் பணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
