
அபாய கட்டத்தில் ஈரான் போர் – உடனடிப் போர் நிறுத்தத்திற்கான திட்டம் கையளிப்பு
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் இரு தரப்பினருக்கும் சிறப்பு அமைதித் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராந்திய ஸ்திரத்தன்மையை முதன்மைப்படுத்தி இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த அமைதித் திட்டம் இரு தரப்பினருக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது .
பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் முன்வைக்கப்பட்ட இந்தத் திட்டம், உடனடியாகப் போர் நிறுத்தத்தை அறிவித்து, முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் நீரிணையை மீளவும் திறப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை இறுதிக்குள் உடன்பாடு ஒன்றுக்கு வராவிட்டால் ஈரான் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
எனினும், எவ்வித அச்சுறுத்தலுக்கும் அடிப்பணியப் போவதில்லை என உறுதியான இருக்கும் ஈரான் ஹார்முஸ் நீரிணையை உடனடியான திறக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்துள்ளது.
இந்நிலையிலேயே, தற்காலிகமாக ‘ இஸ்லாமாபாத் ஒப்பந்தம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த முன்மொழிவு இரு தரப்பினருக்கும் சமர்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சமாதானத் திட்டம், உடனடி போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து 15-20 நாட்களுக்குள் ஒரு விரிவான ஒப்பந்தத்தை இறுதி செய்யும் இரு கட்ட அணுகுமுறையைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்தத்திற்கு பாகிஸ்தான மத்தியஸ்தம் வகிக்கும் நிலையில், அந்நாட்டு இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ், சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோருடன் “இரவு முழுவதும்” பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தற்காலிக போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக ஈரான் நீரிணையை மீளவும் திறக்காது என்றும், இந்த முன்மொழிவை ஈரான் பரிசீலித்து வருவதால் காலக்கெடுவை ஏற்காது என்றும் மூத்த ஈரானிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டரஸ் தெரிவித்துள்ளது.
மேலும், நிரந்தர போர் நிறுத்தத்திற்கான தயார்நிலை அமெரிக்காவிடம் இல்லை என்றும் அந்த அதிகாரி கூறியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
ஈரான் தனது அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஈடாக, அதன் மீது விதிக்கப்பட்ட தடைகளை நீக்குவது மற்றும் முடக்கப்பட்ட நிதிச் சொத்துக்களை விடுவிப்பது குறித்துஒரு உடன்பாடு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .
மேலும், சீனா , துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளும் இந்த அமைதி முன்னெடுப்பிற்குப் பங்களித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
