டிரம்பை கொல்ல தயார் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை – இரத்த ஒப்பந்தத்தின் கொடூர நோக்கம்

டிரம்பை கொல்ல தயார் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை  – இரத்த ஒப்பந்தத்தின் கொடூர நோக்கம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்துள்ளது ஈரான். அண்மையில் அமெரிக்கா நடத்திய தாக்குதல் மட்டும்தான் இதற்கு காரணமா, வேறு பின்னணி உள்ளதா?

டொனால்ட் டிரம்ப் உயிரை எடுக்க சிறிய ட்ரோன் போதும் என ஈரான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டங்கள் உலகிற்கே ஆபத்தானவை என கூறி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஈரான் மீது கடந்த மாதம் தாக்குதல் நடத்தின.

ஈரானும் இதற்கு பதிலடி கொடுத்தது. ஈரானின் மூன்று முக்கிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்காவின் பி-2 ரக போர் விமானங்கள், சக்திவாய்ந்த ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை வீசி தாக்கின.

இதில், அணு சக்தி நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக ஜனாதிபதி டிரம்ப் கூறிவருகிறார். இதனை தொடர்ந்து இஸ்ரேல்- ஈரான் போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

இருந்தாலும் ஈரான் மக்களும் ஈரான் அதிகாரிகளும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது கடுமையான கோபத்தில் உள்ளனர்.

இந்த சூழலில் ஈரான் தலைவர் அயதுல்லா கமொனியின் பிரதான ஆலோசகர் முகமது-ஜாவத் லாரிஜானி (Mohammad-Javad Larijani), நாங்கள் நினைத்தால் ஒரு ட்ரோனை அனுப்பி அமெரிக்காவிலேயே டிரம்பை கொலை செய்து விடுவோம் என கூறியிருக்கிறார்.

ஜனாதிபதி டிரம்ப் அவரது புளோரிடா இல்லமான மார்-எ-லாகோவிற்கு அடிக்கடி செல்வது எங்களுக்கு தெரியும் என்றும், அங்கு அவர் சூரிய குளியலில் ஈடுபடும் போது, ஒரு சிறிய ட்ரோனை வைத்து எங்களால் அவரை கொல்ல முடியும்” என லாரிஜானி (Larijani) கூறியிருக்கிறார்.

இதனை அவர் சிரித்துக்கொண்டே கூறினாலும், டிரம்ப் அதனை கடுமையாக தான் எடுத்துக்கொள்வார். டிரம்ப்-பை கொல்ல வேண்டும் என கூறுவதற்கு லாரிஜானி (Larijani) முன் வைக்கும் முதல் காரணம், காசிம் சுலைமானி (Qasem Soleimani).

இந்த காசிம் சுலைமானி ஈரானின் IRGC எனப்படும் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் தலைவராக இருந்தார். ஈரானின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக அறியப்பட்டவர். 2020-ல் அமெரிக்கா ஜனாதிபதி இருந்த டிரம்ப் காசிம் சுலைமானயை கொலை செய்ய உத்தரவிட்டார்.

அதன்படி, சுலைமானி ஈராக் தலைநகர் பாக்தாத் சென்றிருந்த போது அமெரிக்க இராணுவம் நடத்திய வான்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.
சுலைமானியின் படுகொலையை ஈரான், ஒரு அரசு பயங்கரவாதச் செயலாகவும், இறையாண்மையை மீறுவதாகவும் கருதியது.

அப்போதிலிருந்து, ஈரானிய அதிகாரிகளும் அரசுடன் தொடர்புடைய நிறுவனங்களும் அவரது மரணத்திற்குப் பழிவாங்க திட்டம் தீட்டி வருகின்றன. டிரம்ப் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அனைவரும் கொல்லப்படுவார்கள் என பகிரங்கமாக ஈரான் கூறி வருகிறது.

டிரம்ப்-பை பழிவாங்க ஈரான் கூறும் மற்றொரு காரணம், இஸ்ரேலுடன் இணைந்துக் கொண்டு ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் – ஈரான் போரில் தேவையின்றி அமெரிக்கா மூக்கை நுழைத்தாக ஈரான் குற்றம்சாட்டி வருகிறது.

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல், இறையாண்மைக்கு எதிரானது என அந்நாடு கூறுகிறது.

ஈரானை தாக்கியதற்கு அமெரிக்கா சரி செய்யவே முடியாத விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என ஏற்கெனவே, ஈரான் உச்சபட்சத் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதற்கிடையே, உச்சபட்ச தலைவர் அலி காமெனிக்கு எதிராக டிரம்ப் விடுத்த மிரட்டல்களும் மற்றொரு காரணம். காமெனியை அச்சுறுத்துபவர்கள் “கடவுளின் எதிரிகள்” என்று மதகுருமார்கள் மத ஆணைகள் பிறப்பித்துள்ளனர்.

குறிப்பாக டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோரின் பெயர்களைக் குறிப்பிட்டு, மரண தண்டனைக்கு தகுதியானவர்கள் என அறிவித்தனர். லாரிஜானி வேடிக்கையாக கூறியது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் போன்றது தான்.

தனிநபர்களை தாக்கி கொலை செய்ய ஈரானுக்கு துணிச்சல் உள்ளது என்பதை காட்டவும் மற்றொன்று, ஈரானின் டிரோன் தொழில்நுட்பத்தை பறைசாற்றிக் கொள்ளவும் இது அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

ஈரானின் ஷாஹெட் (Shahed) டிரோன்களை கொண்டு தான் ரஷ்யா உக்ரைனை தாக்கி வருகிறது. துல்லிய தாக்குதல்கள் மூலம், அவற்றின் செயல்திறனை நிரூபித்து வருகின்றன.

எனவே ஈரான் போர் தளவாடங்கள் யாருக்கும் சளைத்தவை அல்ல என கூறாமல் கூறுகிறார் லாரிஜானி (Larijani).

ஷாஹெட் (Shahed) டிரோன்கள் ஒரு வழி தாக்குதலுக்காக வடிவமைக்கப்பட்டன. முன்கூட்டியே திட்டமிடப்பட்ட, இலக்கை நோக்கி பறந்து, தாக்குவதற்கு ஏதுவாக GPS கருவியுடன் உருவாக்கப்பட்டவை.

குறைந்த செலவே பிடிக்கும் ஷாஹெட் (Shahed) டிரோன்களை லட்சக்கணக்கில் தயாரித்து வைத்துள்ள ஈரான். இத்தகைய அச்சுறுத்தல்கள் ஈரானில் உள்நாட்டு நோக்கத்திற்கும் உதவுகின்றன.

இஸ்ரேல் உடனான போரின் போது ஏற்பட்ட ராணுவ பின்னடைவுகளுக்கு ஈடுக்கட்டவும் இத்தகைய கொலை மிரட்டல்கள் பயன்படுகின்றன. ஈரானின் மிரட்டல்கள் பெரும்பாலும் கடுமையானதாக இருந்தாலும், பரந்த புவிசார் அரசியல் சூழலில் இது ஒரு வகையான சமிக்ஞையாகவும் இருக்கலாம்.

மிரட்டல்கள் விடுப்பதன் மூலம், அமெரிக்க அல்லது இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையைத் தடுப்பதையும் எதிர்கால பேச்சுவார்த்தைகளில், தனது அணுசக்தி திட்டம் அல்லது தடைகள் தொடர்பானவற்றில், ஆதாயத்தைப் பெறுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

குறிப்பிட்ட சம்பவங்களுக்கு அப்பால், ஈரானிய புரட்சிகர சித்தாந்தத்தில் அடிப்படை அமெரிக்க எதிர்ப்பு உணர்வு ஊடுருவியுள்ளது. அமெரிக்காவை ஈரான் பெரும்பாலும் “பெரிய சாத்தான்” என்று தான் குறிப்பிடப்படுகிறது.

1979-ஆம் ஆண்டு முதல் ஈரானை யார் ஆட்சி செய்தாலும், அமெரிக்காவும் ஈரானும் கீரியும் பாம்பும் போல தான் பகைமையை பாராட்டி வருகின்றன.

ஈரானின் கொலை மிரட்டல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பிடம் இதனை கொலை மிரட்டலாக கருதுகிறீர்களா? சூரிய குளியலில் எப்போது கடைசியாக ஈடுபட்டீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த டிரம்ப், “ரொம்ப நாள் ஆகிவிட்டது. 7 வயதில் சூரிய குளியல் போட்ட ஞாபகம் உள்ளது என கூறியுள்ளார். சூரிய குளியலில் ஆர்வம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் விடுத்திருப்பது ஒரு அச்சுறுத்தல் என நினைக்கிறேன் என்றும் டிரம்ப் மிக சாதரணமாக எதிர்வினையாற்றியுள்ளார். இஸ்ரேல்- ஈரான் போருக்கு பின்னர், ஈரான் மக்கள் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

டிரம்பை கொலை செய்ய வேண்டும் என ஈரானில் ஆன்லைன் பரப்புரையே நடைபெறுகிறது. பார்சி மொழியில் “இரத்த ஒப்பந்தம்” என பொருள்படும் பரப்புரையை இணையத்தில் தொடங்கியுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை கொல்வது தான் இந்த இரத்த ஒப்பந்தத்தின் நோக்கம். இதற்காக கிரவுட் ஃபண்டிங் முறையில் நிதியும் திரட்டப்பட்டு வருகிறது. 800 கோடி ரூபாய் அளவிற்கு நிதி திரட்டம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை யார் கொலை செய்கிறார்களோ அவருக்கு வழங்கப்படும் என பரப்புரையை தொடங்கியவர்கள் கூறுகின்றனர்.

தற்போது தான் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் டிரம்பை கொலை செய்வோம் என ஈரான் மூத்த அதிகாரி தெரிவித்திருப்பது மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

News 18 – தமிழ்

Share This