ஐபிஎல் 2025 – விராட் கோலி படைத்துள்ள தனித்துவமான சாதனை

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் தொடர் நேற்று மிகவும் கோளாகமாக ஆரம்பமாகியுள்ளது. முதல் போட்டியில் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி அரைசதத்துடன் ஜொலித்தார்.
விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டத்தின் உதவியுடன் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் போட்டியை அபார வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
விராட் கோலி 36 பந்துகளில் 59 ஓட்டங்களையும், பில் சால்ட் 31 பந்துகளில் 56 ஓட்டங்களையும் குவித்திருந்தனர். கொல்கத்தா நிர்ணயித்த 174 என்ற இலக்கை பெங்களூரு அணி 16.2 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து எளிதாக எட்டியது.
பவர் பிளேயில் பெங்களூரு அணிக்காக தொடக்க வீரர்கள் 80 ஓட்டங்களை குவித்தனர். இது ஐபிஎல் வரலாற்றில் பெங்களூரு அணியின் இரண்டாவது அதிகபட்ச பவர் பிளே ஓட்டக்குவிப்பாகும்.
நேற்றையப் போட்டியின் போது விராட் கோலி தனித்துவமான சாதனை ஒன்றையும் நிலைநாட்டியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 1000 ஓட்டங்களை அவர் கடந்துள்ளார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான 32 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1021 ஓட்டங்களை குவித்துள்ளார். மேலும், ஐபிஎல் போட்டிகளில் நான்காவது அணிக்கு எதிரான விராட் கோலி 1000 ஓட்டங்களை கடந்துள்ளார்.
முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு எதிராக அவர் இந்த சாதனையை படைத்திருந்தார். இரண்டுக்கும் மேற்பட்ட அணிகளுக்கு எதிராக இந்த சாதனையை நிகழ்த்திய ஒரே வீரர் சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார்.
மேலும, இந்த தொடரின் போது மற்றுமொரு சாதனையை படைக்கவும் விராட் கோலி தயாராகி வருகின்றார். ஒரு அணிக்கு எதிராக அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்த வாய்ப்பு கிட்டியுள்ளது.
தற்போது, சாதனை அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர் வசமுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அவர் 1134 ஓட்டங்களை குவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷிகர் தவான் சென்னை அணிக்கு எதிராக 1105 ஓட்டங்களை குவித்து இரண்டாம் இடத்திலும் டேவிட் வார்னர் கொல்கத்தா அணிக்கு எதிராக 1093 ஓட்டங்களை குவித்து மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
நான்காவது இடத்தில் உள்ள கோலி, இதுவரை சென்னைக்கு எதிராக 1081 ஓட்டங்களை குவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக சீசன்களில் ஒரே அணிக்காக விளையாடிய வீரர் என்ற பெருமையும் கோலி வசமுள்ளது.
ஐபிஎல் தொடர் ஆரம்பித்தது முதல் இதுவரையில் பெங்களூரு அணிக்காக மட்டுமே விராட் கோலி விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.