யாழில் இரு குழுக்களுக்கு இடையே கடும் மோதல் – வட்டுக்கோட்டை பகுதியில் பலத்த பாதுகாப்பு

யாழில் இரு குழுக்களுக்கு இடையே கடும் மோதல் – வட்டுக்கோட்டை பகுதியில் பலத்த பாதுகாப்பு

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இரு குழுக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வன்முறையில் ஈடுபட்டிருந்தது. இதன்போது நிலைமையை கட்டுப்படுத்த பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்.

மேலும், வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த வன்முறை சம்பவத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளதுடன், மற்றுமொரு மோட்டார் சைக்கிள் அடித்து சேதமாக்கப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

மூளாய் பகுதியில் இரு தனி நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட தர்க்கம், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் வரையில் சென்று, தீர்த்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரு நபர்களின் பிரச்சனை மீண்டும் தலை தூக்கிய நிலையில், அது அப்பகுதியை சேர்ந்தவர்களின் பிரச்சனையாக மாறி இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் போது மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டதுடன், மற்றுமொரு மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் அறிந்து வட்டுக்கோட்டை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது பொலிஸார் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இதனை அடுத்து பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அப்பகுதியில் குழுமி இருந்தவர்களை துரத்தினர்.

அத்துடன் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஏனையவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share This