கெஹெல்பத்தர பத்மே நடத்தி வந்த தொழிற்சாலை – பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்

நுவரெலியாவில் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ICE) தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே, இந்தத் தொழிற்சாலையில் நான்கு மில்லியன் ரூபாவிற்கு அதிகமாக முதலீடு செய்துள்ளதாக அமைச்சர் விஜேபால தெரிவித்தார்.
நுவரெலியாவில் உள்ள ஒரு வீட்டை போதைப்பொருள் தொழிற்சாலையை நடத்துவதற்கு வாடகைக்கு எடுத்துள்ளதாகவும், இதற்காக 2000 கிலோவுக்கும் அதிகமான இரசாயனங்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.
“அவர்கள் இலங்கையில் ஐஸ் போதைப் பொருளை உற்பத்தி செய்துள்ளனர். இது ஒரு தீவிரமான பிரச்சினை. நடந்து வரும் விசாரணைகள் கூடுதல் தகவல்களை வெளிப்படுத்துகின்றன.
இந்த விடயத்தில் இன்னும் ஆழமான விசாரணைகளை நடத்த வேண்டியிருக்கும்,” என்று அமைச்சர் விஜேபால தெரிவித்துள்ளார்.
இந்த பாதாள உலகக் குழு உறுப்பினர்களால் பராமரிக்கப்படும் போலி கடவுச்சீட்டுகளை பெறுவதற்கு அரசியல் தொடர்புகள், பொலிஸ் அதிகாரிகளுடனான தொடர்புகள் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளுடனான தொடர்புகள் பற்றிய தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இந்த விவரங்களை உறுதிப்படுத்த மேலும் ஆழமான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன என்றார்.