இந்திய மீனவர்கள் 08 பேர் கைது – இராமேஸ்வர மீனவ சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இதன்போது, இரண்டு மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டதாகக் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கைதான மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த மீனவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகக் கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரி தமிழகத்தின் இராமேஸ்வரத்தில் உள்ள மீனவர் சங்கங்கள் இன்று மற்றும் நாளை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து முக்கிய மீனவர் சங்கங்களின் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை வரை மீன்பிடி தொழிலில் ஈடுபடாதிருக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமது மீனவ சமூகம் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளதாகவும் மீனவ தலைவர் சேசு ராஜா தி இந்து செய்திப்பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.