
டித்வா பேரிடர் நிவாரணப் பணி!! இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய தீர்மானம்
டித்வா பேரிடரை தொடர்ந்து நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை ஆதரிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஒகஸ்ட் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது, கூடுதல் டி20 சர்வதேச போட்டிகளில் விளையாட இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்தார்.
இந்த விவகாரம் குறித்து பேசிய அவர்,
இந்த ஆண்டு இறுதியில் இந்திய தேசிய கிரிக்கெட் அணி ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது கூடுதல் டி20 போட்டிகள் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் பரவலான சேதத்தை ஏற்படுத்திய டித்வா சூறாவளிக்குப் பின்னர் இலங்கையுடனான ஒற்றுமையின் அடையாளமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சூறாவளி நிவாரணத்திற்காக நிதி திரட்டும் நோக்கில் இரண்டு டி20 சர்வதேச போட்டிகளை விளையாட இந்தியா டிசம்பர் மாத இறுதியில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்ய ஒப்புக்கொண்டதாக சில்வா மேலும் தெரிவித்தார்.
இருப்பினும், வரையறுக்கப்பட்ட காலப்பகுதிக்குள் ஒளிபரப்பாளர் கிடைக்காததால் போட்டிகளை ஏற்பாடு செய்ய முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணியின் ஆதரவிற்கு இலங்கை கிரிக்கெட் தலைவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஒகஸ்ட் மாதத்தில் திட்டமிடப்பட்ட கூடுதல் போட்டிகள் மிகவும் தேவையான வருவாயையும், தொடர்ச்சியான நிவாரணம் மற்றும் மறுகட்டமைப்பு முயற்சிகளுக்கு கவனத்தையும் ஈட்ட உதவும் என்று அவர் மேலும் கூறினார்.
