அதிகரித்து வரும் இஸ்ரேலிய வீரர்கள் தற்கொலை

அதிகரித்து வரும் இஸ்ரேலிய வீரர்கள் தற்கொலை

ஹமாஸ் உடனான போரின் போது தற்கொலை செய்து கொண்ட இஸ்ரேலிய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இறப்புகள் பற்றிய புள்ளிவிவரங்களை இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ளது.

அதன் படி, 2023 ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் 28 இராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இது ஒக்டோபரில் போர் தொடங்குவதற்கு முந்தைய புள்ளிவிவரங்களை விட அதிகமாகும்.

ஒக்டோபர் தாக்குதலுக்கு முன்பு 2023 இல் 10 தற்கொலைகள் நடந்ததாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை சுட்டிக்காட்டியுள்ளது. 2022ல் 14 பேரும், 2021ல் 11 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.

இந்த புள்ளிவிவரங்கள் 2023-2024 காலப்பகுதியில் இறப்பு எண்ணிக்கை கடந்த பத்து ஆண்டுகளில் மிக உயர்ந்த விகிதத்தில் தற்போது உள்ளது என்பதைக் குறிக்கிறது.

அறிக்கைகளின்படி, போருக்குப் பிறகு இஸ்ரேலிய வீரர்களின் மரணத்திற்கு தற்கொலைகள் இரண்டாவது முக்கிய காரணமாகும். இது நோய் மற்றும் விபத்துகளால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கையை விட அதிகம்.

இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் புள்ளிவிவரங்களின்படி, காசாவில் சண்டை வெடித்ததில் இருந்து குறைந்தது 891 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதுடன் 5,569 பேர் காயமடைந்துள்ளனர்.

2023ல் 558 இராணுவ வீரர்களும், 2024ல் 363 வீரர்களும் கொல்லப்பட்டனர். 2022ல் 44 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

அதே சமயம், கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் போரின் மீதான பொதுமக்களின் அதிருப்தி குறித்த அச்சம் காரணமாக இஸ்ரேலிய அரசாங்கம் உண்மையான இறப்பு எண்ணிக்கையை வெளியிடவில்லை என்று நம்பப்படுகிறது.

பலஸ்தீன எதிர்ப்புக் குழுக்கள் உண்மையில் இறப்பு எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருப்பதாகக் கூறுகின்றன.

ஒக்டோபர் 2023 இல் போர் தொடங்கியதிலிருந்து, உதவி எண்களுக்கு 39,000 க்கும் மேற்பட்ட அழைப்புகள் செய்யப்பட்டுள்ளன. இது இராணுவத்தில் தற்கொலைகளைத் தடுக்க உதவியது என்று இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இராணுவத்தினருக்கு உதவுவதற்காக யுத்த காலத்தில் 800 மனநல அதிகாரிகளை பணியமர்த்துமாறு இராணுவம் அழைப்பு விடுத்துள்ளது.

Share This