
இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
இலங்கையில் எச்.ஐ.வி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 600க்கும் மேற்பட்ட புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 13 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய பாலியல் நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்படி, 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை இலங்கையில் 639 எச்.ஐ.விநோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது ஆறு வீத அதிகரிப்பாகும். 2024ஆம் ஆண்டின் குறித்த காலப்பகுதியில் 605 நோயாளர்கள் கண்டறியப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களில், 68 ஆண்களும் மூன்று பெண்களும் 15-24 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், மீதமுள்ளவர்கள் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டில் பதிவான எச்.ஐ.வி நோயாளிகளின் ஆண்-பெண் விகிதம் ஆறுக்கு ஒன்று என பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
