
கொழும்பில் வெள்ளம் ஏற்பட்ட சட்ட விரோத கட்டுமானங்களே காரணம் – பிரதமர் குற்றச்சாட்டு
தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக மேற்கொள்ளப்படும் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களே கொழும்பு நகரம் வெள்ளத்தில் மூழ்கியதற்கு முக்கிய காரணம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் ஹரிணி அமரசூரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொழும்பு மாவட்டத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டுக்கான பொதுவான திட்டத்தை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
“சரியான திட்டமிடல் இல்லாமல், அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில், குறிப்பாக தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளால் கொழும்பு மாவட்ட மக்கள் இத்தகைய ஆபத்தான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளனர்.
ஆகையினால், ஜனாதிபதி முன்வைத்தபடி, இனிமேல் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மற்றும் ஆபத்தான பகுதிகளில் இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம்.
கொழும்பு மாவட்டத்தில் அபிவிருத்தி என்ற பெயரில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்கள் மற்றும் குடியிருப்புகள் கட்டப்படுவதை எந்த மதிப்பீடும் இல்லாமல் அனுமதிக்க முடியாது.
எனவே, கொழும்பு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு ஆண்டும் கொழும்பு மக்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக வெள்ளம் மாறும் சூழ்நிலையை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
அதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேசியுள்ளோம்.
அதன்படி, அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து கொழும்பு மாவட்டத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டுக்கான பொதுவான திட்டத்தை முன்வைத்து அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்று முன்மொழிந்துள்ளோம்.” என பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
