ரணில் குற்றவாளி என்றால் ஜனாதிபதி அனுரவும் குற்றவாளியே – லிஹினி பெர்ணாண்டோ

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது, இலங்கையில் ஜனாதிபதி பதவிக்கு, ஒரு ஆபத்தான முன்னுதாரணமாக உள்ளதென
ஐக்கிய மக்கள் சக்தியில் மொரட்டுவ மாநகர சபை உறுப்பினர் லிஹினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக்கில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
“ஜனாதிபதி பதவியில் பொது மற்றும் தனியார் வாழ்க்கைக்கு இடையிலான ஒரு செயலை குற்றமாக்குவது நாட்டின் மிக உயர்ந்த பதவியின் கண்ணியத்தை அச்சுறுத்துகிறது.
எதிர்காலத் தலைவர்கள் அரசியல் பழிவாங்கல்களுக்கு ஆளாக நேரிடும்.
எதிர்கால ஜனாதிபதிகள் பதவியில் இருக்கும்போது மிகவும் சாதாரண தனிப்பட்ட செயல்பாடுகளைச் செய்ததற்காக கூட வழக்குத் தொடரப்படும் அபாயத்தை தொடர்ந்து எதிர்கொள்வார்கள்.
ஒரு ஜனாதிபதியின் தனிப்பட்ட வாழ்க்கையை பொது வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாது, ஏனெனில் அவரது பாதுகாப்பு, இயக்கங்கள் மற்றும் ஈடுபாடுகள் முழுவதுமாக அரசால் கட்டுப்படுத்தப்படுகின்றன.
உத்தியோகபூர்வ கூட்டங்கள், தனிப்பட்ட விழாக்கள் அல்லது வெளிநாடுகளுக்கு ஜனாதிபதி சென்றாலும்,அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு எல்லா நேரங்களிலும் உடன் செல்ல கடமைப்பட்டுள்ளது.
தனிப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி பாதுகாப்பு நெறிமுறைகளை இடைநிறுத்த முடியாது.
ரணில் விக்ரமசிங்க, தமது பதவிக் காலத்தில் மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக லண்டனுக்கு சென்றதாகவும் அவரது பாதுகாப்புப் பணியாளர்களுக்கான விமானக் கட்டணம் உட்பட தொடர்புடைய செலவுகள் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அவர்
கைது செய்யப்பட்டிருக்கிறார் என்றால் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவும் இந்த சட்டம் பொருந்துமல்லவா?
அவர் தனது தாயாரைப் பார்ப்பதற்கும் தேசிய மக்கள் சக்தியில் அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்வதற்கும் தனது உத்தியோகப்பூர்வ வாகனம், அரசு வழங்கிய எரிபொருள் மற்றும் ஜனாதிபதி பாதுகாப்பைப் பயன்படுத்தியுள்ளார்.
இதனையும் பொது நிதியை தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என கூற முடியும் அல்லவா” என்றார்.